தாழ்வு நேரலாகாதென்று உட்கொண்டு, அரசுகள் வழிப்போந்த வேனி லிளைப்பையும் உடன் உட்கொண்டு என்க. அடிசிலும்....வைத்து - அமுதும் கறிகளும் வேண்டும்போது கொணர்ந்து பரிமாறுதலில் மேலும் காலத் தாழ்வு நேராதபடி உணவுகொள்ளு மிடத்தின் அணிமையிற் பாங்குபெற அமைத்து வைத்துக்கொண்டு. அழகுற - வரிசைபெற வைத்தல், நல்ல பாத்திரங்களில் வைத்தல் என்றிவ்வாறெல்லாம் பொருந்த. எல்லாம் - தண்ணீர் முதலியனவும். படியில் சீர் - படி - ஒப்பு. இவரின்படி வேறொருவருமிலர். சீர் - திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட சிறப்பு. அமுதுசெய்து எம் குடி முழுது உய்யக்கொன்வீர் - சிவஞானிகளாகிய மாகேசுரர்களை அமுது செய்விக்கும் பலன்பற்றித் திருமூலர் "படமாடக் கோயிற் பகவற்காதமே", "உண்டது மூன்று புவனமு முண்டது", "பகரு ஞானி பகலூண் பலத்துக்கு, நிகரில்லை" என்று பலவாறும் விதந்தெடுத் தோதுதல் காண்க. எம் குடி முழுது உய்ய - ஒரு குடியில் ஒருவர் செய்த சிவ புண்ணியம் அக்குடியில் இருபத்தொரு தலைமுறையளவும் ஏற்றவாறு பலன்றரும் என்பர். "மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை, யாழா மேயரு ளரசே போற்றி" (திருவாசகம்). "கண்டோர் கேட்டோர், கோத்திரத்தி லிருபத்தோர் தலைமுறைக்கு முத்தி வரங்கொடுப்போம்" என்று இதுபற்றியே அருணாசலபுராணமும் கூறும். ஈண்டுக் குடிமுழுது உய்யக்கொள்க என்பதனால் வீந்துகிடக்கும் புதல்வன் உள்ளிட்ட என்குடி முழுதும் என்ற குறிப்பும் தருதல் காண்க. "நானு மறியேன்; அவளும் பொய் சொல்லாள்" என்ற பழமொழிப்படி அப்பூதியார் திருவாக்கின்று அவரையறியாமலே போந்த விண்ணப்பத்தின்படி சிவனருளால் "மூத்த சேயையும் காட்டும் முன்னே மேதரு பூதி சாத்த" (1814) என்று அப்போதே அரசுகள் அருளிச் செய்த திறமும் கண்டுகொள்க. 1813. (வி-ரை.) செய்ய அடியிணை விளக்கி - முன்னமே அப்பூதியாரால் தம்முடைய திருவடிகள் விளக்கப்பட்டுஆசனத்தில் அரசுகள் எழுந்தருளி யிருந்தார் (1802 - 1803). ஆயினும் திருவமுதுசெய்வதற்குமுன் பாதம் விளக்கிக்கொள்ள வேண்டிய விதிபற்றி அடியிணையும் திருக்கைகளும் விளக்கினர். செய்ய - செம்மையுடைய. செம்மையாவது, சிவநெறியிற் சரித்த தன்மை. செய்ய - சிவந்த என்றலுமாம். வேறு ஓர் திருந்தும் ஆசனத்தில் ஏறி - வேறு - முன் அமர்ந்திருந்த (1803) ஆசனத்தில் வேறாகிய. திருந்தும் ஆசனம் - அப்போது பயன்படாது, இனிப் புதல்வன் உயிர் பெற்றெழுந்தபின் ஆசனமாகப் பயன்படவுள்ள தென்பது குறிப்பு. இவ்வாறன்றிச் செல்ல அடியிணை விளக்கி ஆசனத்திலேற்றி - என்று பாடங்கொண்டு அப்பூதியாரது உபசரிப்பாக உரைகொள்வாருமுண்டு. அவை முன்னரே நிகழ்ந்து விட்டமை 1802-1803ல் கூறப்பட்டன. பரிகலம் திருத்துதலாவது, இடம் தூய்மை செய்தலும், வாழைக் குருத்தைக் கழுவித் தூய்மை செய்தலும், உரியபடி அமைத்தலும் முதலியன. இங்கு இவைமுற்றுப்பெறாமற் பின்னரே நிறைவெய்து தலின் பின்னர் (1821) விரிக்கப்படும். இருந்து - ஆசனத்தில் திருஅமுது செய்யும் பாங்கினில் அமர்ந்து. வெண்ணீறு சாத்தி - அமுது செய்வதற்கு முன்னும், செய்த பின்னும் திரு நீறணிதல் வேண்டுமென்பது விதி. |