| களவிற் பின்வரு மன்றலுங் காட்டுது மென்றே | | களவிற் பல்வகை யொழுக்கெலாங் காட்டிய கள்வன் | | அளவிற் கெல்லையி லானஃ தவர்க்கியைந் தான்போல் | | வளைவிற் குன்றவர் மகிழ்கொளக் குறுநகை வழங்கி. |
(இ - ள்.) தமிழ் நிலத்தார் கொண்டாடும் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுட் களவு என்னும் ஒழுக்கத்தினை மேற்கொண்டு அதன்கண் பல்வகை யொழுக்கமுங் காட்டிய கள்வனாகிய செவ்வேள் அவ்வொழுக்கத்தின் பின்னிகழ்வதாகிய வதுவை முறையினையும் காட்டுவோம் என்று அவர்க்குடம்பட்டான் போன்று வளைந்த வில்லையுடைய அக்குறவர் மகிழும்படி புன்முறுவல் பூத்தான். அவன் யாரெனின்? அளவைகட்கு எட்டுதலில்லாத முழு முதல்வன். (வி - ம்.) களவு - களவொழுக்கம். மன்றல் - திருமணம். குறுநகை - புன்சிரிப்பு. (637) | இம்பர் முற்றினி ரெனைவிரு மிவள்வள ரோங்கல் | | அம்பர் முற்றின ரனைவரும் வம்மின்கள் விசும்பின் | | உம்பர் முற்றிய தவத்தின ரனைவரு மொருங்க | | உம்பர் முற்றிகழ் தணிகையிற் புரிதுமென் றுரைத்து. |
(இ - ள்.) இவ்விடத்தே எம்மை வளைத்துக்கொண்டீர் அனைவீரும் இவ்வள்ளி வளர்தற்கிடனான மலையிடமாகிய அவ்விடத்தே சூழ்ந்துள்ள அனைவீரும் வாருங்கள். தேவரும் நிறைந்த தவத்தோரும் ஆகிய அனைவரும் ஒன்றுசேர வானத்தே முற்பட்டு விளங்கா நின்ற திருத்தணிகையின்கண் யாம் திருமணவினையை இயற்றுவேம் என்றருளிச்செய்து. (வி - ம்.) இம்பர் - இவ்விடம். அம்பர் - அவ்விடம். உம்பர் - தேவர், வானம். (638) | வள்ளி நாயகி யுடன்வர மயூரமேல் கொண்டு | | துள்ளி வாளைக டுதைதலிற் றூங்குதெங் கிளநீர் | | அள்ளி வார்திரை நித்தில மடைதரச் சிந்தும் | | பள்ளி நீர்ப்பணை யுடுத்தவப் பருப்பதஞ் சார்ந்தான். |
(இ - ள்.) வள்ளிநாயகியார் தன்னோடு வாரா நிற்ப மயின்மிசையேறி வாளைமீன்கள் துள்ளிக்குதித்தலானே நால்கின்ற தெங்கிளங்காயின் நீர் முத்துகளை வரன்றிக்கொண்டு நெடிய அலைகளையுடைய கடலினை அடையும்படி சிந்தா நின்ற நீர் இருக்கைகொண்ட மருதப்பரப்புச் சூழ்ந்த திருத்தணிகை மலையினை எய்தினன். (வி - ம்.) மயூரம் - மயில். நித்திலம் - முத்து. பருப்பதம் - மலை. (639) | இலக்கத் தொன்பதின் மர்களெனு மிளையரு மிகலை | | இலக்கத் தெண்ணுறா வெறுழ்ப்படைத் தலைவரும் பகைஞர் |
|