(வி - ம்.) குறைகள் - களவொழுக்கநாளில் மறை விலக்கிய நாளிற் புணர்ச்சி நிகழ்ந்தமையிலுண்டான குற்றங்கள் என்க. (258) | கனிவகை மாசை தூசு கலனணி நிலன்க டேயம் | | தனிவரங் கதிகண் ஞானந் தயங்கிய வீடு பேறென் | | றினியன வெல்லா மெத்த விரப்பவர் மறைவ லாளர் | | முனிவரர் தேவர் யாரு முகப்புறத் தான முய்த்தான். |
(இ - ள்.) அத் தவிசினிருந்த பெருமான் கனிவகைகளும் பொன்னும் ஆடையும் அணிகலனும் கழனிகளும் நாடுகளும் ஒப்பற்ற வரங்களும் துறக்கப்பேறும் மெய்யுணர்வும் விளங்கிய வீடுபேறும் என்று கூறப்பட்ட இனிமையுடைய பொருளையெல்லாம் மிகுதியாக இரவலரும் வேதியரும் துறவோரும் அமரர்களும் ஆகிய எத்திறத்தோரும் வேண்டியாங்கு முகந்து கொள்ளும்படி தானமாக வழங்கினன். (வி - ம்.) மாசை - பொன். கனி முதலியன இரவலர்க்கும், வர முதலியன தேவர்க்கும். ஞான முதலியன முனிவர்க்கும் வேண்டுவன. (259) | இற்றைநாள் காறு மாத ரெதிருற நோக்கப் பட்டாம் | | முற்றுநா நோக்கப் பட்டு முதன்மையின் வைகற் கிந்தப் | | பொற்றொடி மாதை நோக்கிப் பொலிவுறல் வேண்டு மென்னா | | உற்றருந் ததிநேர் கண்டா ளொண்ணுதல் பார்வை யீந்தாள். |
(இ - ள்.) அருந்ததி யாம் இற்றை நாள் வரையில் உலகத்துக்குல மகளிர் நம்மெதிர் உற்றுப்பார்க்கப்பட்டேம். இனி எக்காலத்தும் மகளிரால் பார்க்கப்பட்டு இத்தலைமைத் தன்மையிலே நிலைபெறுதற்கு இவ்வள்ளி நாயகியாரைப் பார்த்து அவர் திருவருட்கிலக்காகிப் புதிய பொலிவினை யடைதல் வேண்டுமென்று கருதி வள்ளிநாயகியார்பாற் சென்று அவரைக் கண்டனள். ஒள்ளிய நுதலையுடைய வள்ளிநாயகியாரும் அவட்குத் தமது அருணோக்கினை நல்கினர். (வி - ம்.) முற்றும் - எக்காலமும். முதன்மை - கற்புடைமையிற் றனிச்சிறப்பு. மாது - வள்ளி. பார்வை - அருட்பார்வை. (260) | தேவர்கண் முதலோர் நீங்கச் சிலதிய ரேவ லாற்ற | | ஆவயி னகன்று பள்ளி யறையடுத் தமளி வைகி | | மூவிரு முகமு முந்நாற் கரங்களும் விழியு மாக | | மேவுதன் னுருவா லின்பம் விளைத்துவீற் றிருந்தா னன்றே. |
(இ - ள்.) இனித் திருமண விழாவிற்கு வந்த தேவர் முதலியோர் விடைபெற்றுத் தத்தம் இடங்கட்குச் செல்லப் பின்னர்ப் பணிமகளிர் குற்றேவல் புரிய அவ்விடத்தினின்றும் பள்ளியறைக்குச் சென்று படுக்கையிற் றங்கி வள்ளிநாயகியார்க்குத் தன் ஆறு முகங்களும் பன்னிரு தோளும் பன்னிரு விழியுமுடைய திருவுருவத்தாலே வரம்பிலின்பத்தை விளைத்து வீற்றிருந்தருளினன். |