| மலிபெரும் பொருளாற் பெட்கும் வண்மையு நாடா தியாது | | மெலிவுக வுதவும் வாய்ப்பு மெலிகலார் மெலிந்த காலும் | | நலிதரா வளனு மெல்லா நலிவுநீத் தாற்ற வீண்டும் | | ஒலிகெழு விளையு ளோடு முடையது தொண்டை நாடு. |
(இ - ள்.) தொண்டைநாடு அளவிறந்த பொருண்மையால் யாவரும் விரும்பும் வளப்பமும், சிறிதுந் தேடாது துன்பம் நீங்கக் கொடுக்கும் விளைவும் வறுமையடையத் தகாதவர் வறுமையுற்ற காலத்தும் வருந்தாமைக் கேதுவாகிய வளனும் எல்லாத் துன்பத்தையும் நீக்கி மிகவும் பெருகுகின்ற தழைத்த பழனங்களோடும் பொருந்தியுள்ளது. (வி - ம்.) நாடாது யாதும் - சிறிதுந் தேடாது; மெலிவுக - வருத்தங்கெட; வாய்ப்பு, ஈண்டு விளைவு; ஈண்டும் - அதிகரிக்கும். "பெரும் பொருளால்", "கேடறியாக்" என்னும் முதற் குறிப்புக்களையுடைய குறள்களினும் அவற்றினுரைகளினு முள்ள பொருள் இச்செய்யுளில் அமைந்திருத்தல் காண்க. இதுவும் மேலையணி. (5) | பல்குழு வேந்த லைக்கும் படர்கொலைக் குறும்பு தீய | | பல்குமுட் பகையு டற்றும் பகையுறு பசிதீ ராநோய் | | புல்குறி தானு மின்றிப் பொறையொருங் குறுகாற் றாங்கி | | நல்கிறை வேந்தர்க் குய்க்கு நலத்தது தொண்டை நாடு. |
(இ - ள்.) தொண்டைநாடு, சங்கேத வயத்தான் மாறுபட்டுக்கூடும் பல கூட்டமும், அளவு வந்தால் அரசனைக் கொலை சூழுங் குறும்பரும், உடனுறையாநின்றே பாழாகச் செய்யுந் தீயகுணங்கள் நிறைந்த உட்பகையும் புறத்தே நின்று வந்து அழிவு செய்யும் புறப் பகையும் மிக்க பசியும் பெருங்கால் பெருவயிறு முதலிய தீராதநோய்களுமாகிய இவைகள் பொருந்தும் அடையாளங்கள்தாமு மின்றிப் பிற நாடு பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கு தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கிக் கொடுக்கு மிறையை இறைவற்கு ஒருங்கு கொடுக்கும் நன்மையையுடையது. (வி - ம்.) எண்ணும்மைகள் தொக்கன; சங்கேதமாவது சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்குளதா மொருமை; குறும்பராவார் சிற்றரசர், உட்பகை, ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும் புலி கரடி முதலிய விலங்குகளுமாம்; புல்குறி - பொருந்து மடையாளங்கள்; அஃதாவது முதலிரண்டடியிற் கூறிய செயல்கள் நிகழ்தற் கேதுவாக முன்னே நிகழும் உற்பாதங்கள்; புல் என்பதை முதனிலைத் தொழிற்பெயராக்கிக் கொண்டு குறிதானுமென்பதற்குச் சிறிதானு மெனப்பொருள் கூறுவாருமுளர்; "பல்குழுவும்" "உறுபசியும்" "பொறை யொருங்கு" என்னுமுதற் குறிப்புக்களையுடைய குறள்களின் பொருள்கள் இச் செய்யுளில் அமைந்திருத்தல் காண்க; வாழ்வாரது நலம் நாட்டின்மே லேற்றப்பட்டது; இது தொடர்புயர்பு நவிற்சியணி. (6) |