| (இ - ள்.) அடியாரை ஆள்வது உடையார்தம் பெருங்கடமையாம் என்னும் முதுமொழிக்கிணங்க, செழிப்புடைய பவளம் போன்று சிவந்த வாயினையுடைய மகளிர்பாற் சென்று அழுந்திக் கிடந்த அடியேனுடைய புன்னெஞ்சத்தை மீட்டுத் தனது அழகிய கொழுவிய புகழின்கண் அழுந்துமாறு நன்கு பதித்து அதனைப் புதுப்பித்து என்னைப் பாதுகாத்தருளிய திருத்தணிகை மலையின்கண் வீற்றிருக்கும் குமரப்பெருமானுடைய திருவடிப் புகழினைத் தழும்பேறப் பலகாலும் பேசுவதல்லது என்னுடைய செந்நா ஏனையோர் புகழை ஒரு சிறிதும் பேசமாட்டாது. (வி - ம்.) தொழும்பினர் - அடியவர். உடையவர் - ஆள்வோர். தொல்லைமாற்றம் - முதுமொழி. சீர் - புகழ். (82) நாரதன் அருள்பெறு படலம் முற்றிற்று. ஆகச் செய்யுள் 3161
தணிகைப் புராணம் மூலமும் உரையும் முற்றும். |