புராண வரலாற்றுப் படலம் | உலகம் யாங்கணு மிழியிரு குணமிக வுதுதேர்ந் | | தலகில் சீர்முதற் குணமடர்த் தோங்குவா னிறையை | | இலகு பேருரு வாய்த்தரித் திருப்பதொத் துளதால் | | விலகி வாளுமிழ் வெள்ளியம் பொருப்பெனுங் கயிலை. |
(இ - ள்.) இடைவிட்டு ஒளி விடுகின்ற வெள்ளிமலையெனுங்கயிலை உலகத்தெவ்விடத்தும் இழிவாகிய இராசதம் தாமதமென்னும் இரண்டு குணங்கள் மிகாநிற்ப மிகுகின்ற அதனையறிந்து அளவிட முடியாத சிறப்பினையுடைய முதற்குணமாகிய சத்துவகுணம் (அவ்விருகுணத்தையும்) கீழ்ப்படுத்தி உயரும் பொருட்டுச் சிவபெருமானை விளங்குகின்ற பெரிய வடிவினை யுடையதாகித் தாங்குவதை யொத்துளது. (வி - ம்.) இருகுணம் - இராசதம், தாமதம். உது - மிகுகின்ற அதனை. அடர்த்து - அவ்விரு குணத்தையும் கீழ்ப்படுத்தி. வான் : வினையெச்ச விகுதி. (1) | எண்ணி றந்தபல் வரைகளு மெறுழ்வளி மிளிர்ப்ப | | மண்ணும் விண்ணமு மறிகட லடர்க்குமவ் வேலை | | அண்ண லாணையி னிவந்தண்ட முகட்டெல்லை காறும் | | நண்ணி நிற்பது நகுகதிர் பரப்புமச் சயிலம். |
(இ - ள்.) அளவிட முடியாத பல மலைகளையும் வலியோடு கூடிய காற்றானது (பெயர்த்துக்) கெடுப்ப மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அலையை மடக்கி வீசுகின்ற கடலானது கெடுக்கின்ற காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எழுந்து அண்டமுகட்டினதெல்லையளவும் பொருந்தியிருப்பதாகும். விளங்குகின்ற ஒளிவிடுகின்ற அக்கயிலைமலை. (வி - ம்.) எல்லாவுலகங்களும், மலைகளும் அழிகின்ற ஊழிக்காலத்தில் கைலைமலை வளர்ச்சியுறுமென்பதனை விளக்கிய " ஆணையினிவந்து அண்டமுகட்டெல்லைகாறு நண்ணி நிற்பது" என்றார் இதனை "ஊழிதோ றோங்குமவ் வோங்கல்" என்னும் பரஞ்சோதியார் திருவிளையாடலானுணர்க. (2) | புரம்பொ டிப்பவா னவர்பிரான் பொலங்கிரி வாங்கிக் | | சுரம்பி டித்தஞான் றுலகெலாங் கவிழ்தராக் காட்சி | | வரம்ப டைத்தபொன் வரையுமற் றேனைய வரையும் | | உரம்ப டைத்ததா னூன்றியே நிற்றலிற் போலும். |
(இ - ள்.) திரிபுரத்தைச் சுடும்பொருட்டுத் தேவர்கள் தலைவனாகிய மகாதேவன் மேருமலையை வளைத்துத் திருக்கரத்தின்கட் கொண்ட காலத்து எல்லாவுலகங்களும் கவிழாத தோற்றமானது மேன்மை பொருந்திய மேருமலையையும். ஏனைய மலையினையும் வலிமைபொருந்திய (வெள்ளிமலையாகிய) தான் ஊன்றி நிற்றலினாற் போலும். |