பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்317

மிர்தம். பரபோகவமிர்தம் - மோட்சம், இதனை "அமிர்தம் கேவலம் கைசித்தி மோக்கம்" என்னும் பிங்கலந்தையா னுணர்க.

(1)

வேறு

 மாங்குயின் மிழற்றுமொழி மங்கையுமை யாளோர்
 பாங்குற மடங்கலணை மீதுபயில் வெள்ளி
 யோங்கலி னொருத்தனுயி ரோம்பிய வெழுந்த
 வீங்கருளி னோடினிதி ருந்தருளும் வேலை.

(இ - ள்.) மாமரங்களின் வதிகின்ற குயிலினிசைபோல இசைக்கும் மொழியினையுடைய உமாதேவியா ரொருபக்கத்தே பொருந்தச் சிங்காசனத்தின் மேற்றங்கிய வெள்ளிமலையின்கண் ணுள்ள ஒப்பற்றவனாகிய சிவபெருமான் ஆன்மாக்களைக் காத்தற்பொருட்டு இயல்பாகத் தோன்றிய மிக்க கருணையுடன் இனிதாக எழுந்தருளியுள்ள காலத்து,

(வி - ம்.) குயில் - ஆகுபெயர். பயில் - தங்கிய. ஓம்பிய - ஓம்ப.

(2)

 நெற்றிவிழி யாளர்நிமி ருந்தலைமை பூண்டோர்
 துற்றதலை மாலைதவழ் தோளினர்க ளெல்லாம்
 பிற்றகைய முற்றவிர்பெ ருந்தகைமை நந்தி
 உற்றடிவ ணங்கினனு ளக்குறைதெ ரிப்பான்.

(இ - ள்.) நுதலிற் கண்ணினையுடையவரும், முதன்மையாகத் தலைமைபெற்றவரும், தலைமாலை நெருங்கிய தோளினையுடையவருமாகிய கணங்கள் யாவரும் பின்னர்த்தங்க முன்னே தங்கிய பெரிய தகுதியினையுடைய நந்தியெங்குரவன் (இறைவன்) திருவடியினைப் பொருந்தி வணங்கி உள்ளத்தின் கண்ணுள்ள குறையினைத் தெரிப்பானாயினான்.

(வி - ம்.) நெற்றிவிழியாளர் - சாரூபம் பெற்றவர். துற்ற - நெருங்கிய. பிற்றகைய - பின்னர்த்தங்க. முற்றவிர் - முன்னர்த்தங்கிய.

(3)

 ஓதுமறை யாகமமு யர்ந்தகலை முற்றும்
 ஏதமக லக்கருணை நோக்கினெனை வைத்துத்
 தீதறந வின்றுபொரு டெள்ளிதின ளித்தாய்
 மேதகைய வாகம விழுப்பனுவன் மாட்டு.

(இ - ள்.) (அடியேன் மாட்டுள்ள) ஆணவ முதலிய மலக்குற்றங்கணீங்கக் கருணைப்பார்வையான் நயனதீக்கை செய்து இருத்தி ஓதுகின்ற வேதங்களும், ஆகமங்களும், வேறுயர்ந்தனவாகிய பலகலைகள் முழுதும் குற்றம் நீங்கத் திருவாய்மலர்ந்தருளி அவற்றினுட் பொதிந்துகிடந்த நுண்பொரு ணலங்களையெல்லாம் தெளிவாகத் திருவாய்மலர்ந்தருளினாய். மேன்மைபொருந்திய சிறந்த நூலாகிய ஆகமத்தினிடத்து.

(வி - ம்.) கருணைநோக்கினெனை வைத்து - நயனதீக்கை செய்திருத்தி. ஏதம் - ஈண்டு மலக்குற்றம். பனுவல் - நூல். இதனை "விழுப்பத்து வேண்டும் பனுவற்றுணிபு" என்னுந் திருக்குறளானறிக.

(4)