பக்கம் எண் :

380தணிகைப் புராணம்

 மேலெனத் தத்தங் கோளே விதந்தலை கின்றார் நந்தி
 சாலவன் றருளு நூலிற் றலைப்படா வுள்ளத் தாரே.

(இ - ள்.) திருநந்தியாகிய ஆசிரியர் பரமாசிரியரிடத்துக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை மேவிய அக்காலத்தே நல்ல மாணவர்க்குச் செவியறிவுறுத்தி நற்சந்தான முறையி னுலகினுக்கருளிய சிவஞானபோத நூலின் வழியே அறிவு சாலும் வண்ணம் உண்மை நெறியைத் தலைப்படாத கற்பித நூல்களைப் படைத்திட்டு மொழியும் மந்த வறிவினர் அந்நூலானே நுண்ணுணர் வடைந்தார் போன்றும், அதனானே மயக்கந்தரும் மும்மலங்களின் நீங்கினவர் போன்றும், அதனானே உண்மை நெறியை யறிந்து வீடுகைவரப் பெற்றவர் போன்றும் தங்கடங்கள் மதக்கோட்பாடுகளையே உயர்ந்தனவென்றும் கூறி உழிதருகின்றார்கள். இவரறியாமை இருந்தபடி யென்னே! இரங்கத்தக்கது.

(148)

 சத்திய நிருவா ணத்தாற் றனுகர ணாதி தம்பால்
 பொத்திய வோட்டி னொட்டாப் புளிம்பழம் போற றேற்றார்
 அத்தினா லுடல்போ மென்ப ரதுபுரி முறையுந் தேற்றார்
 பித்தென மயங்கி நிற்பார் பெரிதிவ ருணர்ந்தார் போலும்.

(இ - ள்.) சத்திய நிருவாணமென்னுந் தீக்கையினாலே உடல் கரண முதலியவைகள் தம்மிடத்தே மூடிய ஓட்டிலே யொட்டாத புளியம்பழம்போலக் கூடியுங் கூடாதிருத்தலை யுணருமதுகையில்லாதார் அத்தீக்கையினாலேயே உடனேயே உடம்பொழிந்து விடுமென்பர். அதனைச் செய்யும் முறையினையு மறியாதவராய்ப் பித்துண்டாயினாரைப் போல மயங்கி நிற்பர் இவர் மிக்குணர்ந்தவர் போலும்.

(149)

 பிறவுயிர்க் கருள நிற்கும் பெற்றிமை யோரார் தேகத்
 துறும்வினை யுடல்போங் காறு முயிருண்ணு மென்பா ரென்னின்
 அறிவொடு கலத்த லின்றா யாம்வினை வளரத் தேகம்
 மறுவலு மெடுப்ப தோரா ரிவர்களு மலமற் றாரே.

(இ - ள்.) (அச்சத்திய நிருவாண தீக்கைய முத்தராகிய அப்பரமாசாரியர்கள் பரிபாகமுடைய உயிர்களுக்கு அனுக்கிரகஞ் செய்யும் பொருட்டு) அவ்வுடம்போடு அங்ஙனம் நிற்கு மதுகையில்லாதவர்கள், உடம்பிற்பொருந்திய பிராரத்த கன்மவினையை அவ்வுடம்பு நீங்குமளவும் அவ்வுயிரே உண்ணுமென்றுரைப்பாரைப்போல, சிவஞானத்தோடும் பிரிப்பின்றிக் கலத்தலின்றாகி, அவ்வினை நுகர்ச்சியாற் பிறர் செய்வினை வளர்ந்துவர, அவ்வான்மா அவ்வினை தலைக்கீடாகப் பின்னரும் பிறப்பிற் சென்றுழிதருவதன்றி அஃதொழியுமாறில்லை யென்பதை உணரமாட்டார்கள். இத்தகுதியுடையவர்களும் மும்மலங்களின் நீங்கினவராவரோ ஆகார்.

(150)

 ஆங்கவன் போல யானு மறுகுண முடையே னென்பார்
 ஓங்கவன் றொழில்க ளெல்லா முஞற்றுவல் யானே யென்பார்
 தேங்கிய பிரமம் யானே தெளிவுறின் வேறின் றென்பார்
 ஈங்கிவ்வா றுரைப்போ ரெல்லா முயிரியல் புணரா தோரே.