பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்387

உட்பொருளைக் கூறியருளினார்; அது நிகழ்ந்தது, இத்திருத்தணிகை மலை. ஆதலால், "வேலோன் தெவ்வுபதேசமும் செப்பிய தாமால்" என்றார். தெவ் - கொள்ளுதல், அஃதாவது பெறுதல் என்னும் பொருளது. 1 "தெவுக்கொளற் பொருட்டே" என்பது தொல்காப்பியம். உபதேசமும் செப்பியதென்பது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. ஆல் : அசைநிலை.

(6)

 நம்மரு ளாணையி னந்திசி றந்த
 அம்மலை நண்ணிய ருந்தவ மாற்றிச்
 செம்மற ருஞ்சிவ ஞானமு ணர்ந்தான்
 எம்மரு கெய்தியி ருந்தனன் மீட்டும்.

(இ - ள்.) நம்முடைய அருட் கட்டளைப்படி நந்தீசுரனானவன், சிறந்ததாகிய அத்தணிகைமலையைச் சேர்ந்து அங்கே முருகனை நோக்கி அரிய தவத்தைச்செய்து சிறந்தோனாகிய முருகனால் உணர்த்தப்பட்ட சிவஞானத்தை அறிந்து, அதன் பின்னரே மீண்டு நம்பக்க லெய்தி இருந்து வரலானான்.

(வி - ம்.) அருள் ஆணை - அருளையுடைய கட்டளை உருபும் பயனும் தொக்கதொகை. செம்மல் - தலைவன் ; அறிவாற் சிறந்த முருகவேள். சிவஞானம் "சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம். அஃதாவது பதியின் இலக்கணத்தை உணரும் உயரிய அறிவு. பதி பசு பாசம் என்னும் மூவகைப்பட்ட பொருள்களின் உண்மையை உணருகின்ற தன்மையுடையது. உணர்ந்தான் :
முற்றெச்சம்.

நந்தி ஆற்றி உணர்ந்தான் இருந்தனன் என வினைகூட்டிப் பொருள் முடிபு
காண்க.

(7)

 ஓருட லட்டொளி பெற்றதிக் காசி
 பாரிடை வந்துப ணிந்தவர்க் கெல்லாம்
 ஈருட லீட்டிருண் மாயைகன் மங்கள்
 வேரொடு மாய்த்தலிற் காசியின் மேலாம்.

(இ - ள்.) எல்லா இடங்களிலிருந்தும், ஆங்கு வந்து சேர்ந்து, தன்னை வழிபட்ட யாவருக்கும், அவர் தம் பருவுடல் ஒன்றையும், அழித்தலினால், இக்காசி நகரம், புகழ்பெற்றதாகும், பருவுடல் நுண்ணுடல்களால் உண்டாக்கப்பட்ட, அறியாமையாகிய மயக்கத்தையுடைய இரு வினைகளையும், அடியுடன் கெடுத்தலினாலே, அக்காசியைக் காட்டினும் இத்திருத்தணி உயர்ந்ததாகும்.

(வி - ம்.) காசி நகரம், அத்தலத்தில் இறந்தோர்க்கு வீடுபேறு தருமென்பது ஆன்றோர் கண்டறிந்த உண்மையாகும். இவற்றை 2 "துவக்கற அறிந்து பிறக்கும் ஆரூரும் தொடர்ந்திடா தடைந்துகாண் மன்றும், உவப்புடன் நிலைத்து மறிக்குமோர் பதியும் ஒக்குமோ நின்திரு நகரை"

 1.  தொல். பொருள். உரியியல் : 47. 
 2.  சோணசைலமாலை ;