பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்85

(இ - ள்.) குறிஞ்சி நிலத்தின்கணுள்ள மலையானது ஒளிவிடுகின்ற அரவங்களின் மணிகளையும் வயிரங்களையும் ஒலிக்கின்ற அருவியாகிய கரங்களால் நீண்ட கடற்குக் கொடுப்ப, குளிர்ச்சி பொருந்திய கடலும் விளங்குகின்ற பவளங்களோடு நிறைந்த முத்தினைத் திரைகளாகிய கரங்களால் மலைக்குக் கொடுத்து, இரண்டு பேரரசர்கள் தம்முட்டலைப் பெய்தகாலத்து ஒருவர்க்கொருவர் செய்கின்ற வரிசையினைக் காட்டா நிற்கும் அழகும் ஆயிடைப் பொருந்தும்.

(வி - ம்.) வித்துருமம் - பவளம். ஓங்கல் - மலை. திரு - அழகு.

(159)

 குரும்பை மென்முலை தோன்றுமுன் பாளையங்
           குரூஉத்துகின் மிசைபோர்த்திட்
 டரும்பி முன்வரு காலது நீவுவ
           தழகெனப் புறவத்து
 விரும்பு முல்லைகள் சிரிப்பநீர்ப் பழனத்து
           விறந்தநெட் டிலைத்தெங்கு
 பெரும்ப ழங்களாற் றளவினைச் சிதைத்திடும்
           பிணக்குள தொருபாங்கர்.

(இ - ள்.) செறிந்த நீண்ட இலைகளோடுகூடிய தென்னைமரம், குரும்பையாகிய மெல்லியதனங்கள் காணப்படுவதற்குமுன் பாளையாகிய நிறம்பொருந்திய ஆடையால் மேலே போர்த்து அரும்பி வெளிவருங்கால் அத்துகிலை நீக்குவது அழகன்றென முல்லைநிலத்துள்ள யாவராலும் விரும்பப்படுகின்ற முல்லைக்கொடிகள் சிரியாநிற்ப, அத்தென்னை மரம் பெரிய பழங்களால் அம்முல்லையினை அழிக்கின்ற மாறுபாடு ஒரு பக்கத்துள்ளது.

(வி - ம்.) குரு - நிறம். "குருவும் கெழுவும் நிறமு மாகும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. முன்வருகால் - வெளியே தோன்றும் காலத்து. அது - பாளையாகிய ஆடை. நீவுவது - நீக்குவது. அழகு என்பது குறிப்பு மொழியாய் அழகன்றென்னும் பொருள் தந்துநின்றது. விறந்த - செறிந்த. நெட்டிலை - நீண்ட ஓலை. இதனை "பழங்கொள் தெங்கிலையெனப் பரந்து பாய்புனல்" என்னும் சிந்தாமணியா னறிக.

(160)

 கேழ்த்த பொன்மலர்க் கடுக்கைசூழ் மாதவிக்
           கிளர்கொழுந் திருண்மேகம்
 தாழ்த்த சாகைய வயன்மரு தினங்களைத்
           தாவவந் நிலவேழம்
 சூழ்த்த நீள்கொடி வயலைமென் கொழுந்துக
           டுறுவனத் தெழுபூவை
 ஊழ்த்த பூஞ்சினை தாய்ப்பரத் தையர்கருத்
           துறழ்வளங் களுமாங்கண்.