| அம்மைநற் றவங்கள் சால வாற்றினோன் மகப்பே றின்றி | | இம்மையின் வறங்கூர்ந் துள்ளா னேந்திழை மனைவி யோடும் | | கைம்மலை யுலம்புஞ் சார லேகுவான் கண்டு நண்ணி | | விம்மிமிக் கழுத கொம்பை விம்மிதத் தொடுங்கைக் கொண்டு. |
(இ - ள்.) முற்பிறப்பிற்றவங்களை மிகச்செய்த அவன் பிள்ளைப் பேறின்றி இப்பிறப்பில் துன்பமிகுந்துள்ளவன் அணிகலங்களைத் தாங்கிய தன் மனையாளோடு யானைகள் முழக்கஞ் செய்யும் மலைப்பக்கத்துச் செல்வான். (அக்குழவியைப் பார்த்துச்சென்று விம்முதலுற்று அழுதலைச்செய்த கொம்புபோல்பவளாகிய அப்பெண்ணை வியப்புடனே கையாலெடுத்தென்க. (வி - ம்.) அம்மை - முன்பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. வறங் கூர்தல் - துன்பமிகல். கைம்மலை - யானை. உலம்புதல் - முழங்கல். விம்மிதம் - வியப்பு. (7) | வருந்திய வருத்தந் தீர வரையுறை கடவு ணம்பால் | | திருந்தழ கெறிக்கு மிந்தச் செல்வியைத் தந்த தென்னா | | முருந்துறழ் முறுவ னல்லாண் முகப்புறக் கொடுத்திற் புக்கு | | விருந்துக ளோம்பி வள்ளி யெனப்பெயர் விதித்தா னன்றே. |
(இ - ள்.) (யாம் மகப்பேறின்றி) வருத்தமுற்ற வருத்தம் நீங்குமாறு இம்மலையின்கண்ணே வதியும் கடவுள் நம்மிடத்துத் திருத்தமாகிய அழகு விளங்குகின்ற இந்தச் செல்வியை அளித்தருளியது என்று மயிலிறகின் அடிவரிசையை யொத்த பல்லொழுங்கினையுடையவள் உச்சிமோந்து வாங்கிக்கொள்ள (அவள்பாற்) கொடுத்துத் தங்களில் லின்கண்ணே சென்று (இப்பிள்ளைப் பேற்றின் மகிழ்வால்) விருந்தினர்களைப் பாதுகாத்து வள்ளியென்னுந் திருப்பெயரினையும் (அம்மகவுக்கு) இட்டானென்க. (வி - ம்.) வரையுறை கடவுள் - முருகன். முகப்புற - உச்சி மோந்து வாங்கிக்கொள்ள. அன்று, ஏ : அசை. (8) | நித்தலுங் கடவுட் போற்றி நிரைந்தனர் குரவை யாடி | | நித்தலு முருவே றாக நீர்மையின் வளர்க்க லுற்றார் | | தத்தையுங் கிடந்தி ருந்து தவழ்ந்தெழுந் தொதுங்கிச் சிற்றில் | | முத்தினி லிழைத்து வண்ட லாட்டினின் முதிய ளானாள். |
(இ - ள்.) நாடோறும் கடவுளை வணங்கிக் குழுமினராய்க் குரவைக் கூத்தைச் செய்து நாடோறும் வடிவம் வேறுபடத் தன்மையோடு வளர்க்கத் தொடங்கினர். கிளிமொழியன்ன வசனங்களையுடைய வள்ளிநாயகியாரும் பூமியிற்கிடந்து பின்னரிருந்து தவழ்ந்து எழுந்து நடத்தல் செய்து சிறுவீட்டை முத்தினாலிழைத்து வண்டல் விளையாட்டினில் முதிர்ச்சியுடையளானாள் என்க. (வி - ம்.) உருவேறாக - நாடோறும் வளர்தல். ஒதுங்கல் - நடத்தல். வண்டலாட்டு - விளையாட்டு. (9) |