(வி - ம்.) வள்ளல் - முருகன். ஓங்கல் - மலை. பாவை : ஆகுபெயர். வல்லே - விரைவாக. புகலுதும் - சொல்வோம். சார்பவனாகிய நாரத முனியென்க. (12) | புரிவளை யலறி யீன்ற புதுநிலா மணியும் பொன்னும் | | விரிமலர்த் தாதுங் கோட்டின் வீசுவெண் டரங்க மெற்றும் | | கரிசறு குமார தீர்த்தங் காதலி னாடிப் போந்து | | தரியலர்க் கடந்த வேலான் றாட்டுணை வணக்கஞ் செய்தான். |
(இ - ள்.) முறுக்கினையுடைய சங்குகள் (கர்ப்பவாதனை) அடைந்து அலறுதல் செய்தீன்ற நிலவைச் செய்கின்ற முத்துக்களும், பொற்கட்டிகளும், மலர்ந்த மலரின் பொடியும், கரையினிடத்து வீசுகின்ற அலையோடு கூடிய குற்றமற்ற குமார தீர்த்தத்தின்கண் அன்பினால் மூழ்கி வந்து (சூரன் முதலிய) பகைவர்களை வென்ற வேற்படையினையுடைய முருகன் இரண்டு திருவடிகளையும் வணங்கினானென்க. (வி - ம்.) தரங்கம் - அலை. கரிசு - குற்றம். தரியலர் - பகைவர். கோடு - கரை. (13) | தூணமுந் தளிர்கள் காலத் தொல்வரை யுருகா நிற்பப் | | பாணறி கின்ன ரங்கள் பாடுவீழ்ந் தவச மாக | | வீணைகைக் கொண்டெ ழாலின் விளையமிழ் துகுத்துப் பாடிக் | | காணிய விறைவ வென்று காரிகை திறத்தைக் கூறும். |
(இ - ள்.) (பட்ட) தூணங்களும் (இசையின்பமுணர்ந்து) தளிர்களை வெளிவிடத் தொன்மைத்தாய மலைகளும் இளகி நிற்ப, இசைப் பாட்டின்பங்களையறியும் கின்னரமென்னும் பறவைகள் அவசரமாகப் பக்கத்தே வீழ வீணையைக் கையிற்கொண்டு நரம்பின்கண் விளைகின்ற (இசையாகிய) அமிழ்தினைச் சிந்திப்பாடுதல் செய்து இறைவனே காண்கவென்று வள்ளிநாயகியாரின் வனப்பின் கூறுபாடுகளைச் சொல்லத் தொடங்கினானென்க. (வி - ம்.) எழால் - நரம்பிசை. காணிய - காண்க. கின்னரம் - இசையறியும் ஒருவகைப் பறவை. (14) வேறு | அண்ட முற்று மரும்பய னல்குசீர் | | கொண்ட விந்தக் குலவரை மேற்றிசை | | அண்டர் போற்ற வணிமையி னுள்ளது | | மண்டு பேரொளி வாய்ந்தமேற் பாடியே. |
(இ - ள்.) இவ்வுலக முழுதினுக்கும் பெறலரும் பயனை யளிக்கின்ற சிறப்பினைத் தன்பாற்கொண்ட இச்சிறந்த தணிகை வரையின் மேற்றிசையின்கண் பேரொளி பொருந்திய மேற்பாடியென்னும் ஊர் தேவர்களுந் துதிக்க அணிமைக் கண்ணுள்ளதென்க. (வி - ம்.) சீர் - சிறப்பு. குலவரை - சிறந்தமலை. வரையின்மேற் றிசையில் மேற்பாடியுளதென்க. (15) |