பக்கம் எண் :

920புராணகதைகள்

பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளின னென்பதாம்.

பிரமதேவன் கண்ணன்திருவிளையாடலைக் கண்டு வியந்த வரலாறு:- கண்ணன் ஆயர்சிறுவர்களுடன் பசுவின் கன்றுகளைமேய்த்துவரும் நாட்களில் ஒருநாள், பிரமதேவன் எம்பெருமானது திருவிளையாட்டைக் காணவேண்டு மென்று கருதிக் கன்றுகளையுஞ் சிறார்களையுந் தன்மாயையினால் வானத்தே மறைத்துவைக்க, அச்சுதன் அஃதுணர்ந்து வண்ணமும் வனப்பும் தோற்றமும் வடிவும் தொழிலும் குணமும் பூணும் துகிலும் தாரும் குழலும் சிறிதும் வேற்றுமையில்லாமல் தானே சிறாருங் கன்றுமாகித் தத்தம்மனைகட்குப் போய்வந்துகொண்டிருக்க, இங்ஙனமே ஓராண்டுசெல்ல, நான்முகன் அது கண்டு நாணமுற்றுச் சிறார்களையுங் கன்றுகளையுங் கொணர்ந்து சமர்ப்பித்துக் கண்ணனைப் பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிப் பலவாறு தான்செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டன னென்பதாம்.

கண்ணன் காட்டுத்தீயை விழுங்கிய கதை:- பிருந்தாவனத்தில் முஞ்சாரணியத்திற்பிரவேசித்தபோது தைவிகமாகத்தோன்றித் தங்களைச்சூழ்ந்த பெருங்காட்டுத்தீயில் அகப்பட்டுக்கொண்டு கோபாலர்களும் கோக்களும் முறையிட்டுப் பலவாறு துதிக்கக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் 'நீங்கள்யாவரும் பயப்படாமல் உங்கள் நேத்திரங்களை மூடிக்கொள்ளுங்கள்' என்று நியமித்தருளி, தனதுவிராட்ஸ்வரூபத்தை வகித்து அவ்வக்கினியைச்சுவாலையோடும் பானஞ்செய்து, அவ்வாயர்களையும் ஆநிரையையும் பாண்டீர மென்னப்பட்ட ஆலமரத்தினடியில் தனது மாயையினாற் கொண்டுவந்துசேர்த்துக் காத்தருளினன் என்பதாம்.

'வரைக்குடையாய்' என்ற விவரம்:- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படிசமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லித் தானே ஒருதேவதாரூபங் கொண்டு அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம்முதலிய பலமேகங்களை யேவி, கண்ணன்விரும்பிமேய்க்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்குஇஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும்மலையை யெடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்தடுத்து எல்லாவுயிர்களையும் காத்தருளின னென்பதாம்.

ஆயரெல்லாம் பரமபதத்திற் சென்று மீண்ட வரலாறு:- யமுனையில் தீர்த்தமாடுகின்ற சமயத்தில் ஓரசுரனால் வருணலோகத்திற் கொண்டுபோ யொளிக்கப்பட்ட நந்தகோபரை ஸ்ரீகிருஷ்ணன் அங்குஎழுந்தருளி மீட்டு வந்தபொழுது தன்னைப் பூஜித்து உத்தமகதியையடைய விரும்பிய சகல கோபாலர்களுக்கும் ஞானக்கண்ணைக் கொடுத்து, தனது திவ்வியதேஜோ மயமான ஸ்வரூபத்தையும், பரமபதம் முதலிய ஸர்வபுண்ணியலோகங்களையுங் காணும்படி யருளினன் என்பதாம்.

கண்ணன் பாரிஜாததருவைக் கொணர்ந்த வரலாறு:- கண்ணன் நரகா சுரனையழித்தபின்பு அவனால் முன்புகவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதி