சோர்வாலாகிய ஏனைய உறக்கத்தின் பின் தூய்மை செய்துகொண்டு புத்துணர்வு பெறுதல் சாலும்; ஆனால் நாயனாரின் இவ்வுறக்கம் சோர்வையும் ஏத நினைவையும் நீங்கிய புனிதக் காட்சியைத் தரிசிக்கச் செய்ததாகலின் அக்கனவுக் காட்சியையே கழுவி ஒதுக்குவதுபோல் நீரால் தூய்மை செய்துகொள்வது அமையும்; ஆதலின் அதைத் தவிர்க்க, "எழுந்தபடியே வழிபட்டார்" என்றவாறு. மாதாரார்க்கும் - மாதர் - பெண், காதலி, பொன் - ஈண்டு, அம்மையார், தம் கணவனாரின் உலகியல் வாழ்வுக்குத் துணைவியராக அமைந்தது மட்டுமன்றி, அவர்தம் ஆன்ம வாழ்விலும் துணை நின்றார். இதனை, அவர், தம் கணவனார் வழி நடந்து வந்த அயர்வால் புறங்கடையில் துயிலும் நிலையிலும் அவரைத் துயிலுணர்த்தித் "திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யுங் கடன் முறையால் அங்கிதனை வேட்டு" அதன் பின்பே "அமுது செய்து பள்ளிகொள்ள" வேண்டுவதால் அறிக. அதனால் நாயனாருக்கு உடலோடு மட்டுமன்றி உயிர்க்கும் காதலியாகின்றார். எனவே பொன் போன்ற உயர்வுடையவரானார். ஆதலின் "மாதர்" என்ற மட்டில் அமையாது "ஆர்" என்ற சிறப்பு விகுதியும் புணர்த்து "மாதாரார்க்கும்" என்று கூறினார் ஆசிரியர். முன் பாட்டிலும், "முழுதும் தருமம்புரி மனையார்" என்றது காண்க. நாயனார், தாம் கனவிற் கண்ட இறைவரின் அருளிப்பாட்டை "அருளுடையார் அளித்தருளும் செவ்விய பேரருள் விளம்புந் திறமன்று" (1743) என்ற விதிக்கு மாறாக ஈண்டு, "மாதரர்க்கும் புகுந்தபடி மொழிதல்" அம்மையாரின் சிவனடிமைத் திறம் கருதியேயாம் என்க. புகுந்தபடி - கனவில் நிகழ்ந்த வண்ணம். புகுதல் - உரியவர் அனுமதியின்றி அவர் அழையாதிருந்த காலத்தும் தானே வலிய உள் நுழைதல். "புகுந்தனன் முத்தநாதன்" (473). ஈண்டு, நாயனார் நினையாதிருந்த போதும் இறைவன் அவர் கனவில் தோன்றினான் என்றவாறு. விரைவோடு - கனவில் பெற்ற அருளிப்பாட்டை நேரில் காணும் ஆவலால் செல்கின்றார் - ஆதலின் வழக்கமாகச் செல்வதைவிட விரைந்து செல்கின்றார் என்றவாறு. நாதனார்தம் திருஆரூர் - நாதனார் - சிவபெருமான். திருஆநர் - அவர்தம் செல்வமாகிய முத்தித்திரு நிறைந்த திருவாரூர். ஆர்தல் - நிறைந்து இருத்தல். ஞான மறையோர்களாகவும், சிவ கணங்களாகவும் விளங்கும் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவபெருமானின் உடைமைப் பொருள்களாகிய அவன் செல்வங்களேயாம். அவர்கள் நிறைந்துள்ள ஊராதலின் "திருவாரூர்" என்றார் எனலுமாம். எதிர் அந்நகர் காண்பார் - தொலைவில் வரும் பொழுதே முதலில் கட்புலனாவது நகரமாதலின் அதை ஈண்டுக் கூறினார். அண்மையில் நெருங்க அந்நகரின் மக்களாகிய "திருவாரூர்ப் பிறந்தார்" தெரிவதும்; மேலும் அருகில் வர அவர்கள் அனைவரும் சிவகணங்களாகக் காட்சி தருவதும் வரும் பாட்டில் கூறுவார். பதிப்பாசிரியர் குறிப்பு :- முன் பதிப்பில் இப்பாடலுக்கு விளக்க உரை காணப்படவில்லை. ஆதலின் உரையாசிரியரின் மாணவர் ஒருவர் எழுதி உதவியுள்ள இவ்விளக்க உரைக் குறிப்புக்களை இப்பதிப்பில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். |