கலைஞானக்கன்று - ஆளுடைய பிள்ளையார் உவமையிலாக் கலைஞானத்தை உண்டருளியவர் என்ற குறிப்புப் பெற ஞானக் கன்று என்றார். (திருஞான - புரா - 70) பார்க்க. எனவும் - எனவும் - எனவும், கன்றும் - அரசும், சென்று - சேர்ந்தார் என்ற முடித்துக்கொள்க. எனவும் - போலவும். என - உவமவுருபு. இம்மூன்றும் இரு பெருமக்களும் கூடியதனுக்கு உவமமாயின. அருளும் அன்பும் கூடுவதுபோலவும், கண் இரண்டும் காட்சியிற் கூடுவதுபோலவும், சிவமும் சத்தியுமருளிற்கூடுவது போலவும் பிரிக்க முடியாதவாறு இவர்களது கூட்டம் நிகழ்ந்தது என்பதாம். "எம்பெருமக்களும் இயைந்த கூட்டம்" (1448) என்றும், "ஒருவரொருவரிற் கலந்தவுண்மை" (1449) என்றும் முன் கூறிய கருத்தினை விரித்து உவமை முகத்தால் அறிவித்தாவாறு. அருட்கடல் அன்புக்கடல் - சைவநெறி பெற்ற வலக்கண் இடக்கண் - இறைவரருள் சத்தியருள், இவற்றை கன்றுடனும் அரசுடனும் நிரனிறையே கூட்டிக்கொள்க. அன்பு அருளாகப் பரவி, சிவநெறி கண்டு, இறைவனருள் கொண்டு பேறெய்த வுள்ளதென இம்மூன்றும் ஒரு பொருள் மேலனவாய் முடியும் தன்மையும் கருதுக. அன்பும் அருளும் இலக்கணமும் பிரமாணமுமாக, சைவநெறிசாதனமாக, அம்மையப்பர் அருள் பயனாக விளங்கும் குறிப்பும் காணத்தக்கது. அன்பிற் பெரிய இந்த இரண்டு பெருமக்களின் கூட்டத்துக்கு இணையாக இறைவனது அருணெறியும் அருளுமேயன்றி வேறொன்றும் இணையாகாதென்ற உண்மையும் காண்க. சிவன் தனக்குவமையில்லாதவன். அவனைத் தமக்குள்ளே நிறையக் கண்டு திளைத்து நின்று வேறொன்றும் காணாத பெருமக்கள் ஒருவரோ டொருவர் கூடியபோது விளையும் சிவானந்த மேலீட்டுக்கும் வேறொன்றும் உவமையாகாது இவ்வாறு காணும் உவமைகள் ஆசிரியரது தெய்வக்கண்ணுக்கே புலனாவன! புண்ணியக்கண்ணிரண் டென்றதனால் அபுத்தி பூர்வம் புத்தி பூர்வம் - பொது சிறப்பு - உபாயம் உண்மை என்னும் இருவகைப் புண்ணியங்களால், முறையே அன்பும் அருளும் நிகழப்பெற்று, அவ்விரண்டன் (அன்பு அருள்) பயனாக, இறைவியினருள் (சிவஞானம்) தோன்றப்பெற்று, அதனால் இறைவனருள் (திருவடிப்பேறு) கிடைக்கப்பெற்றும் என்னும் சைவ சித்தாந்தப் பொருள் விளங்கும் குறிப்பும் காணலாம். இது பண்டிதர் - திரு. S. பெரியசாமி பிள்ளையவர்களின் குறிப்பு. இருபெருமக்கள் கூடிய இக்கூட்டத்துக்கு இவ்வாறு மூன்று உவமைகள் கூறிய தென்னையோ? எனின் அது, இவர்கள் கூடும் கூட்டமும் மூன்று முறை நிகழ்வதாகும் சரிதவிளைவினைக் குறிப்பதா மென்க. அவற்றுள் இங்குத் தோணிபுரத்திற் கூடிய கூட்டம் முதலாவதாம். அதனை "அருட்பெருகு தனிக்கடலும் உலகுக்கெல்லாம் அன்பு செறிகடலுமாம் எனவும்" என்றார். திருப்புகலூரில் பின்னர்க் கூடிய கூட்டம் இரண்டாவதாம். அது பலகாலம் தொடர்ந்து நிகழ்ந்தது. திருவீழிமிழலையில் பஞ்சகாலம் வர, இருவரும் சிவபெருமானருளிய படிக்காசு பெற்று அடியாரை ஊட்டிச் சைவ நெறியை உலகினில் வளர்த்தருளினர். அக்கூட்டத்தினையே "நீடிய சீர்த்திரு ஞானசம் பபந்தனிறை புகழா, னேடிய பூந்திரு நாவுக்க கரசோ டெழின்மிழலைக், கூடிய கூட்டத்தினாலுள தாய்த்திக் குவலயமே" (ஆளு - பிள் - திருவந் - 80) என்று போற்றினர் நம்பியாண்டார் நம்பிகள். திருமறைக் காட்டில் வேதநெறி தழைத்தோங்கவும் மிகு சைவத்துறை விளங்கவும திருக்கதவம் திறக்கவும் அடைக்கவும் நிகழச் செய்த பெருஞ்செயலும் அப்போது நிகழ்ந்தது. இக்குறிப்புக்கள் பெறப் பொருட் |