பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்273

 

ஆளுடையபிள்ளையாரை வெளிப்பட்டு ஆட்கொண்ட இறைவர் தோணியப்பர். ஆதலின் அவரும் அரசும் அங்குச் சென்று முன்னின்று பதிகம் பாடினர் என்க. சீகாழியில் உள்ள பிரமபுரீசர், தோணியப்பர், சட்டையப்பர் என்ற மூன்று சந்நிதிகளுள் இப்பதிகம் தோணியப்பர் சந்நிதியில் நின்றுகொண்டு பாடினர். (பதிகக் குறிப்பு)

பரிவு - உறு - பயில்வோரெல்லாம் அன்பினை பொருந்தப் பெறுவர் என்க.

அன்பு உறும் மாலை என்று கூட்டினும் அமையும்.

பத்தி - மாலை - ஒருவகை மாலையின் குறிப்பும்படப் பத்தி என்றார்.

பார் கொண்டுமூடி - பதிகத் தொடக்கம்.

அரிய வகை - பிரிதற்கரிய வகையால். "அண்ணலைப் பிரிய மாட்டா அளயிலா தரவு நீட" (759) என்றது காண்க. பிரியலாற்றாத வகையினால்.

பிள்ளையார் தம் திருமடம் - இது மேலைக்கோபுர வாய்தலினை அடுத்து வெளிப்புற வீதியில் இருந்ததென்பர். தம் - நாயனாரை வேறெங்கும் தங்கவிடாமல் பிள்ளையார் தமது திருமடத்திலே எழுந்தருளக் கொண்டனர் என்பது குறிப்பு. எழுந்தருளி - நாயனார் தமது திருமடத்தில் தங்கப் பெற்றதனைச் சிறந்த பேறாகக் கருதினர் பிள்ளையார் என்று குறிக்கச் சைவமரபு வழக்கில் அருமைப்பாடு குறிக்கும் இச்சொல்லாற் கூறினர்.

அமுது செய்து - இங்கு அமுது செய்தலை ஒரு பெருந் தனிச் செயலாகக் குறிக்க வேண்டிய தென்னையோ? எனின், அடியாரை யமுதுசெய்வித்தல், மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் இரண்டினின் முதலாவதாகும் என்று உலகுக்கு உணர்த்தும் பிள்ளயார் அதனைச் செய்து காட்டினார் என்க. "ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க், கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" (திருமயிலை - 1 - பிள்ளையார் - சீகாமரம்). ஆதலின் பிள்ளையார் நாயனாரையும் அவருடன் வந்த அடியார்களையும் தமது திருமடத்தில் எழுந்தருளுவித்துச் சிறப்புபோடு திருவமுதாக்கி அமுது செய்வித்தருளினர். அந்த அருளமுதத்தை நாயனார் அன்போடு அமுது செய்தருளினர். அமுது செய்தது நாயனார் செயல்; செய்வித்தது பிள்ளையார் செயல். நாயனார் அமுது செய்த செயலை இப்புராணத்தும், அமுது செய்வித்த செயலைச், செய்வித்த அவர்தம் புராணத்தும் உரிமைப்பட விதந்துகூறும் ஆசிரியரது தெய்வக் கவிமணம் காண்க. "சோறுமணக்கு மடங்களெலாம் தெய்வமணக்கும் செய்யுளெலாம்" என்ற பிற்காலப் புலவர் பாட்டும் காண்க. "அணையுந் திருத்தொண்டர் தம்மோ டாண்ட வரசுக்கு மன்பா, லிணையி றிருவழ தாக்கி யியல்பா லமுது செய்வித்து" (திருஞான - புரா - 273) என்பது காண்க. பிள்ளையார் தாம் விரும்பி யமுதுசெய்விக்கத்தக்க பெருமை நாயனாரைவிட வேறு யாவருக்குளது?

மருவிய நண்பு உறுகேண்மை அவற்றை நாள்போல் வளர்ந்து ஒங்க - கேண்மை - சுற்றம். இங்குச் சிவகணமாகிய பெருஞ் சுற்றம் குறித்தது. மருவிய - உள்ள நிறைந்து பொருந்திய. நண்பு உறு - என்றது நண்பில்லாக் கேண்மையு முளவாதலின் இது அவ்வாறன்று என உறு என்றார். ஏயர்கோன்கலிக்காம நாயனார் சரிதவரலாற்றில் அவர்க்கு நம்பிகள் திறத்து முன்பகுதியில் நின்றதும், திருவருள் காட்டிய பின்பு நம்பிகளைக் கண்டவுடன் நின்றதும் ஆகிய இருநிலைகளையும் இங்குக் கருதுக. "கேளிரே யாகி" (ஏயர்கோன் - புரா - 404) என்பது காண்க. கேண்மை - பெருகிய அன்பினில் விளைவது. நண்பு - நட்பு என்னாது நண்பு என்று கூறியது இவ்விளைவு திரிதல் முதலிய விகாரத்தாலன்றி அன்பாகிய இயல்பினால் உண்டாவது என்ற குறிப்பாகும். "பெருகன்பு நண்பும் பொங்கிய காதலிற் கும்பிட்டு" (திருஞான - புரா - 273) என இதனைப் பின்னரும் இவ்வாறே கூறுதல் காண்க. கேண்மை - அன்பு என்றலுமாம்.