மழுவும் ஏந்துதல் இல்லாமலிருப்பவர். மானும் மழுவும் பற்றுதற்கு முன் நின்ற திருவுருவம். "ஏறிமழு வோடின மான்கை யின்றி யிருந்த பிரான்" (புகலியும் - வீழியும் - நட்டபாடை - 9) என்ற பிள்ளையார் திருவாக்குக் காண்க. இங்குக் கூறியருளியது பொதுவிலக்கணம். பற்றிய - இனி பற்றும்பொருட்டு என்று கொண்டு கையைநீட்டி யிருந்தவன் என்று குறிப்புவினையாவணையும்பெயரின் வினையுடன் முடிந்தது என்றலுமாம். ஏகாரம் தேற்றம். 1453. (வி-ரை.) அத்தன்மை பயில் - முன்பாட்டிற் கூறியபடி நண்புறுகேண்மை வளர்ந்தோங்க வுடன்வைகுந் திறத்தினில். பயிலுதல் - பன்னாள் நிகழ்தல். அளவளாவிய மகிழ்ச்சி ..செல்லுநாள் - அளவளாவுதல் - ஒருவர் ஒருவருடன் உணர்வுகலந்த உரையாடலும் பழகுதலும் ஆம். அளவிலாத சித்த நெகிழ்ச்சி - எல்லை காணாதபடி மனமுருகும் மகிழ்வு. நாள் செல்லுதல் - காலம் போதல். அனுபவ முதிர்வினால், காலம் போகின்ற தன்மை இவர்களால் அறியப்படாது தானாகவே கழிதல். "மிகுபுலவிப் புணர்ச்சிக்கண், ஊழியா மொருகணந்தானவ்வூழி யொருகணமாம்" (ஏயர்கோன் - புரா - 268) என்று காதலி காதலர்க்கிடை உள்ள நிகழ்வு இவ்வாறு அன்பிற் கலந்தார்க்கு மொக்கும். திருவுள்ளந்தன்னில் - மெய்த்து எழுந்த பெருங்காதல் என்று கூட்டுக. அன்பர் கூட்டத்தில் கலந்து இருந்த நாயனார்க்கு அணைந்தோர் தன்மையிற் காணும் மற்றொரு இயல்பாகிய ஆலயந் தொழுதலில் காதல் எழுந்தது; இவை யிரண்டுமே மக்களுக்கு உறுதியாவன என்று உலகுக்கு உணர்த்தும் பொருட்டு எழுந்ததென்க. மெய்த்து - உண்மைத் திறத்தினால் உள்ள நிரம்பி மேல் பொங்கி. மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு மன்னிய தானங்கள் - மைதழையும் என்றது எதுகை நோக்கி மைத்தழையும் என நின்றது. பொன்னி நாட்டு மன்னிய தானங்கள் - மிடற்றார் எங்கும் உள்ளவராயினும் காவிரி நாட்டில் வெளிப்படப் பொருந்திய இடங்கள். அவரும் அது மேவி நேர்வார் - மேவுதல் - பொருந்துதல். அப்பெருங் காதலை அவரும் பொருந்தியவராகி. நேர்தல் - உடன்படுதல். அவரும் - பிள்ளையாரும். நேர்வார் - நேர்வாராகி. முற்றெச்சம். நேர்வார் - சென்று - இறைஞ்சி - மீண்டருளினார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. தன்மைபயில் தன்மைதனில் - என்பனவும் பாடங்கள். 188 1454. (வி-ரை.) எழுந்தருள - புறப்பட. மரபு வழக்கு. அவரோடும் சென்று கோலக்காவை இறைஞ்சி - என்க. அவரோடும் செல்லுதல் - சிவதூரம் உடன் சென்று வழிவிடும் மரபு. கோலக்காவை யிறைஞ்சி மீளுதல். இது, உடன்சென்று வழிவிடும் செயலுடன், மணிமிடற்றார் மன்னிய தானங்கள் வணங்கிப் போற்ற முன் கூறியபடி இருவருள்ளத்தும் எழுந்த பெருங்காதலினைச் செலுத்தியபடியு மாயிற்று. இத்தகைய பெருமை பெரியோர் செயல்களிற் காணவுள்ளதன்றி ஏனை மக்ளிடைக் காண்பதரிது. அன்புகொண்டு மீண்டருளினார் - அவர் பிரிந்து சென்றாலும் அவரது அன்பினைக் கைக்கொண்டு மீண்டனர் என்க. மீண்டருளுதல் - மரபு வழக்கு. அவரும் - அரசுகளும். விடைகொண்டு - பிள்ளையார் நாயனாரது அன்பினையும், நாயனார் பிள்ளையாரது அன்பு விடையினையும் கொண்டனர். இருவரும் ஒருவர்பாலொருவர் விடை கொள்ளினும், பிள்ளையார் அங்குத் தங்குவாரும், நாய்னார் அங்கு நின்று செல்வாருமாதலின் விடைகொள்ளுதல் இவர்பால் நிகழ்ந்ததென்றார். |