பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்279

 

யூரினின்றும் போந்து திருநீடுர் பணியாது சென்று திருவருளால் நினைந்து அடைந்து "நீடூர்பணியா விடலாமே" என்று பதிகம்பாடிப் பணிந்து பின் திருப்புன்கூர் சென்றடைந்தனர் என்று சரிதங்க காட்டுகின்றார். நாயனாரது பதிகத்துள் இந்த இரண்டு தலங்களையும் ஒன்று சேர்த்தி யருளப்பட்டுள்ளது. ஆளுடையபிள்ளையாரது திருப்புகலியும் திருவீழிமிழலையும், திருமருகலுந் திருச்செங்காட்டங்குடியும், திருநள்ளாறும் திருவாலவாயும், திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் என்ற திருப்பதிகங்கள் காண்க. ஆயின் இங்குச் சரிதசம்பந்தமாக இவையிரண்டினையும் சேர்த்துப் பாடுதற்குரிய குறிப்பு ஒன்றும் ஆசிரியர் காட்டவில்லை. இப்பதிகம் சில பிரதிகளில் இல்லை என்றதொரு குறிப்பு சைவசித்தாந்த மகா சமாசம் - நாயனார் தேவாரம் - மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றது. சரிதக் குறிப்பில்லாதபடி இவ்வாறே உள்ள திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் என்ற திருத்தாண்டகத்தின் அமைப்பும் ஈண்டுக் கருதத்தக்கது. நாயனார் திருவாக்குக்குரிய அருமையாகிய பல அழகிய அமைப்புக்கள் இப்பதிகத்து உள்ளன. இப்பதிகத்தில் "நீதனே னென்னேநால னினையாவாறே" என்ற மகுடம் நாயனார் திருவுள்ளத்து அதுபோது எழுந்ததற்கு ஏதேனும் திருக்குறிப்பு இருத்தலுங்கூடும். திருப்புன்கூரீல் எழுந்தருளிய சிவலோகநாதரையும் திருநீடூர் இறைவனையும் நான் நினையாது காலங் கழித்தவாறு தான் என்னே? என்பது பதிகக் கருத்து.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பிறவாதே தோன்றிய பெம்மான் - என்று முள்ளவன். எங்கும் நிறைந்த அவன் ஒவ்வோர் இடத்திலும் காலத்திலும் வெளிப்படுதல் மாயையிற்பட்ட பிறப்பு அன்று. துறவாதே கட்டறுத்த என்பதும் இக்கருத்து. பேணாதான் - வெளிப்படாதவன். அருளாதவன். சிவலோகன் - திருப்புன்கூர்ச் சுவாமி பெயர். நீதன் - நீசன். நினையாமையால் நீதன் என்றது. நான் என்னே நினையாவாறு - நினையாத அறிவீனம்தான் என்னே. (2) பின் - முன் எல்லாப் பொருட்கும் முன்னும் பின்னும் ஆயவன். பித்தர்க்குப் பித்தன் - தன்பாற் பித்துக்கொண்டு பிடித்தோரிடம் தான் பித்துத்கொண்டற்போலப் பற்றி நிற்பவன். நல்வினையும் தீவினையுமானான் - எல்லாமாய் நின்றவன். "மெய்ம்மையும் பொய்ம்மையுமாயினார்க்கு" (திருவாசகம் - பொற்சுண்ணம் - 20). -(3) எவ்விடத்தும் இல்லானை - உள்ளானை - இல்லான் தோயாதிருத்தலையும், உள்ளான் கலந்திருத்தலையும் குறிக்கும். இனிய ... இன்னாதான் - இனியவற்றை நினையாதவர்க்கு இன்னாதான் - கொடியவன். வல்அடைந்தார் - வலிதாக - பற்றாக - அடைந்தவர்க்கு. அருளும் வண்ணம் வல்லானை என்க. மாட்டாதார் - நினைய சொல்ல - அடைய - மாட்டாதவர். மாட்டான் - வெளிப்பட்டருள மாட்டாதவன். செல்லாத - பிறர் எவரும் செல்ல இயலாத. -(4) (தான் ) கல்லாமே (பிற எல்லா உயிர்க்கும்) கற்பித்தான். இயல்பாகவே முற்றறிவுடையவன். அங்கங்கே - "உயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்" (பிள்ளையார் - வீழி). -(5) நோக்காதே - நோக்கினான் - எங்குங் கண்ணாய் அறிபவன். "ஆயிரமுக்கண்," "எண்ணில் பல கோடி திருவுரு நாமம் ஏர்கொண் முக்கண் முகம்" (சேந்தனார் திருவிசைப்பா வீழி - 8-9) "சகஸ்திராட்ச" (வேதம்) நுணுகாதே யாதொன்று நுணுகியான். "அணுவோரண்டமாஞ் சிறுமைகொண்டு" (கருவூர்த்தேவர் திருவிசைப்பா - கங்கைகொண் - 6). "நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானை" (திருஞான - புரா - 402). "அணோரணீயான்" (வேதம்). - பூணலாப் பூண் - பூணத்தகாத - வேறு எவரும் பூணவியலாத - பாம்பு - பூசாச் சாந்தம் - திருமேனிமேல் நின்ற நீறு. ஊணலா ஊணான் - பிச்சை. தான் உண்ணற்பொருட்டன்று. -