முதலிய கணங்கள் குடமுழாமுழக்க அதற்கிசைந்த. சதி - தாளம்; இசை ஒத்து கூத்து - "ஆடினார் பெருங்கூத்துக் காளி காண" (5). இஃது திருவாசகத்துட் போற்றப்பட்டபடி, "தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்"டாகாமல் அம்பலவர் தாம்புக்குப் பயிலும் நட்டம். "புகைந் தெழுந்த சண்டத்தீப், போலே பூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ், சொர்க்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத் தோடாயாமே மாலோகத் துயர்களை பவனதிடம்" - (பிள்ளையார் - தேவா - கழுமலம் - தாளச்சதி - வியாழக்குறிஞ்சி - 5.) அரவு ஒன்று ஆட்டி - தலசரிதம். -(4) ஒற்றி - திருவொற்றியூர். -(5) வேடனாய்......கூடினார் - வேடனாய்ச் சென்று விசயற்கருளிய வரலாறு. உமையவளுங் கோலங்கொள்ள என்றதனை, முன், கூடினார் என்ற பொருளுடனும், பின்வரும் ஆடினார் என்ற பொருளுடனும் ஆக இருவழியும் கூட்டி உரைக்க வைத்தோதினார். -(6) புத்தி - இறைவரது இலிங்கத்திருமேனியின் மேல் இலை உதிர் சருகு முதலியவை விழாமல் இந்த நூல் வலயம் காப்பதாக என்ற எண்ணம். பொதுப் பந்தர் - மேற்கட்டி. சிறப்புச் செய்ய - மாடக் கோயில்களையமைத்து நித்திய நைமித்திக வழிபாடுகள் இயற்றச் செய்ய. திறலான்மிக்க - தனது பலங்கருதிய அறிவு. மிகுந்த சிலந்திக்கும் வெள்ளானைக்கும் அருளிய திருவானைக்காவின் வரலாறு; கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் பார்க்க. பத்தர்களுக்கு இன்னமுதாம் - இவ்வாறு அடியார்களுக்கு இறவாத இன்பவீடு தருவர் என்றது குறிப்பு. (7) அருமந்த - அருமருந்தன்ன என்பதன் மரூஉ. தணல் முழுகு பொடி - ஊழியில் உலகம் எரிந்து எஞ்சிய நீறு. "நீறு பூத்த நெருப்பு" (பழமொழி). பொடி முழுகு தணல் என்று கூட்டி, ஆடும் என்றதனை உவம உருபாகக்கொண்டு, பொடி முழுகும் நெருப்புப் போன்று நீறு கொண்டுவிளங்கும மேனி என்றுரைப்பது மொன்று. "செவ்வான் வண்ணர் பாலொத்த வெண்ணீற்றா" (9).-(8) பண்டரங்க வேடன் - பண்டரங்கக் கூத்துக் கிசைந்த வேடத்தர். -(9) அந்தகன் - அந்தகாசுரன். கைக்கொண்ட - காத்த.-(10) நீறணிந்தான் கயிலைவெற்பு - நீறணிந்த இறைவரது கயிலைமலை. தலவிசேடம் :- திருப்பாசூர் - தொண்டை நாட்டின் 17-வது தலம். தலமரம் மூங்கில. இறைவர் அதனடியில் முளைத்தெழுந்தனர்; இக்காரணத்தால் தலப்பெயர் போந்தது (பாசு - மூக்கில்). "வேயிடங் கொண்டுலகுய்ய விருப்பார்" (1604) என்று இதனை ஆசிரியர் எடுத்தோதினர். சந்திரனுக்கு அருள்புரிந்த தலம். (பதிகம் பார்க்க). குறும்பர் மன்னன் சார்பாகச் சமணர் கரிகாற் சோழன் மீது ஏவிய பாம்பை இறைவர் எடுத்து ஆட்டியருளினர் என்பது தல வரலாறு. அம்மை வலப்பாகம். சோடச கணபதி விசேடம். சுவாமி - பாசூர் நாதர்; அம்மையார் - பசுபதிநாயகி; பதிகம் - 3. இத்தலக் கோயில் மிக நன்றாயும் சுத்தமாயும் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது. இது திருவள்ளூர் என்ற புகைவண்டி நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலை வழி 2 நாழிகையளவில் உள்ள திருவள்ளூரை அடைந்து அங்கு நின்றும் மேற்கே கற்சாலைவழி 2 நாழிகையில் அடையத்தக்கது. 1606. (வி-ரை.) மலர்ச்சீர் - மலர் - மலர்போன்ற; பண்புத்தொகை. மலர் - அழகு என்ற பொருள்தந்து நின்றது. அழகாவது சிவனது அருளணி. பதியை - ஐ - உருபு நீக்கப்பொருளில் வந்தது. நோயை நீங்கினான் என்புழிப்போல. "உருபினும் பொருளினு மெய்தடுமாறி, யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாம், திரிபிட னிலவே" (தொல் - சொல் - 101.) அயல் உளவாம் பதி அனைத்தின்....போற்றி - அயலின் உளவான எல்லாத்தலங்களினும் வழிபட்டனர். இவை திருவள்ளூர், திருவெண்பாக்கம் முதலியன. |