22. குலச்சிறை நாயனார் புராணம் தொகை | "பெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்" |
- திருத்தொண்டத் தொகை வகை | "அருநமி ழாகரன் வாதி லமணைக் கழுநுதிமேல் இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் தோ; னெழிற் சங்கம்வைத்த பெருந்தமிழ் மீனவன் றன்னதி காரி; பிரசமல்கு குருந்தவிழ் சாரன் மணமேற் குடிமன் குலச்சிறையே" - (26) |
-திருத்தொண்டர் திருவந்தாதி விரி 1695. | பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச் செந்நெ லார்வயற் றீங்கரும் பின்னயற் றுன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது மன்னு வண்மையி னார்மண மேற்குடி. |
1 புராணம் :- குலச்சிறை நாயனாரது பண்பும் வரலாறும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே, திருநின்ற சருக்கத்தில் இரண்டாவதாகக் குலச்சிறை நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார். தொகை :- பெருநம்பி எனப்படும் குலச்சிறை நாயனாரின் அடியவர்க்கும் நான் அடியேனாவேன். ‘பெருநம்பி' என்பது முன்னாள் வழங்கிய சிறந்ததொரு குலப் பட்டப்பெயர். "ரகுமரபிற் - பொன்னும் பெருநம்பி குலச்சிறையும்" - தக்கயாகப் பரணி - 211 என்றதும் அதன் உரைக் குறிப்பும் பார்க்க. நம்பி - ஆடவரிற் சிறந்தவன். இங்குக் குலங்குறித்தது. இதனால் நாயனாருடைய மரபும் பேரும் பேசப்பட்டன. வகை :- அருந்தமிழாகரன்....ஏற்றுவித்தோன் அரிய தமிழாகரராகிய ஆளுடைய பிள்ளையார் செய்த வாதத்தில் தோற்ற சமணர்களைப் பெருமையுடைய தமிழ்நாட்டில் கழுவில் ஏற்றுவித்தவரும்; எழிற்சங்கம்...அதிகாரி - அழகிய முத்தமிழ்ச் சங்கங்களையும் நிறுவிய பாண்டியனின் மந்திரியாரும்; பிரசம்...மன் - தேன் பொருந்திய குருந்த மலர்கள் அலர்தற்கிடமாகிய சாரல்களையுடைய மண மேற்குடித் தலைவரும் (ஆனவர்); குலச்சிறையே - குலச்சிறை நாயனாரே யாவர். குலச்சிறையே - ஏற்றுவித்தோனும் - அதிகாரியும் - மன்னும் - (ஆவன்) என்று கூட்டிமுடிக்க. தமிழாகரன் - ஆளுடைய பிள்ளையார்; தமிழாகரன் செய்த வாதில் - என்க. தமிழ்நாடு - பாண்டியநாடு; தமிழாகரன் வாதில் என்றமையால் வாதம் வென்றவர் பிள்ளையாரென்றும், ஏற்றுவித்தோன் - மன் - என்றமையால் அரசநீதி முறையில் தண்டஞ் செய்வித்தவர் என்றும், இருந்தமிழ் நாட்டிடை - என்றமையால் நீதிவரம்பு கடவாத ஒழுக்கமுடைய நாட்டில் இச்செயல் நடந்தது நெறி பிறழாத செய்கையேயாம் என்றும் அறிவித்தபடியாம். விரிவுகள் ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுட் கண்டுகொள்க. சங்கம் - வைத்த - பாண்டியர் |