பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்909

 

கற்பனை:- 1. தருமத்தின் வழி நின்று வாய்மையில் ஊனமில்லாத சிறப்புப் பெருவணிகரது குடிகளி னியல்பு.

2. வணிகர் வாழும் கடற்கரைப் பட்டினங்களில் கடலலைகள் சுமந்து கரைக்கேற்றக், கழிகளில் தங்கும் சங்குகளினால் வளம் பெருகும் வகையால் வாணிகத்தினியல்பைக் கடலலைகள் காட்டும்.

3. பெறற்கரிய பெண்மகப் பெறுதல் முன்னைத் தவத்தா லாவதொன்று.

4. தளர்நடைப் பருவத்தே அடிமைப் பண்பிற் பழகிவரும் மொழி பயிலுதலும், மொழி பயின்றபின் எல்லாம் வண்டலாட்டயரும் பருவத்தேயும் இறைவர்பால் காதல் சிறந்த திருவார்த்தை பயில்வதும் முன்னைத் தவப் பேற்றாலாவது.

5. ஒருகுடிக் கொருபுதல்வியா யமைந்தபோது கலியாணம் முடிந்தபின் அப்பெண் பிறந்த நகரைவிட்டு மணமகனது நகருக்குச் செல்லாது பெற்றோர்களிருக்கும் நகரில் தனம் பெருகக் கொடுத்து வேறு குடிவாழ்க்கையாக வாழ வைப்பதும் வணிகர்பால் முந்தையோரால் நிகழ்ந்த ஒரு வழக்கு.

6. மனையறத்தினின்றபடி வளம் பெருக்கி இல்லினை நீங்கி வெளி நாடு செல்லாது செய்யப்படுவதும்; கப்பலோட்டிக் கடல்மீது வேற்று நாடு சென்று செய்யப்படுவதும் என வாணிபத்துறை பண்டை நாளிலும் இருவகையாயியன்றது.

7. மனை அறத்தில் வழா தொழுகும் மாதர்கள், அந்நிலைக்கண் ணின்றே, தமது மனையின் வந்தணையும் அடியார்க்கு அன்புடன் அமுதமூட்டியும், பொன் - மணி - துகில் முதலியவற்றில் வேண்டுவனவற்றை அளித்தும் இறைவன் றிருவடிக்கீழ் உணர்வு முதிரும்படி ஒழிகிச் சிவநெறி நிற்றலும் கூடும்.

8. ஒருவரிடத்துக் குறை வேண்டுவோர் மாங்கனி முதலிய இனிய பண்டங்களைக் கையுறையாக வைத்துக் கண்டு குறைதீரப் பெறுதல் முன்னாளினின்று வரும் வழக்கு.

9. உடல் நாயகனாகிய கணவன் தம்மிடம் சேர்த்து வைப்பித்த பண்டங்களை அவன் இன்னதற்குப் பயன்படுத்துக் என்று பணிக்கப் பெறாதபோது, மனைவியார் அவற்றை ஏற்றவாறு உயிர் நாயகராகிய இறைவர்பால் ஏற்பித்துப் பயன்படுத்துதலும் கற்புநெறி நிற்கும் மனைவியர்க்கு இல்லறத்திற்குரிய வழக்காகும்.

10. சிவன் அடியவர்கள் பசித்து அணைந்தால் அவரை உடனே பசி தீர்த்தல் கடன். கறியமுது முதலியவை அது போழ்து உதவா விடினும் திருவமுது கனி முதலியவற்றுடன் விரைந்து அளித்து உண்பித்து அவரது மகிழ்ச்சி காணுதல் அன்பு நெறிக்குரிய வழக்கு.

11. இனிய உணவுப் பண்டம் பெற்றபோது அவற்றுள் ஒரு பங்கு மனைவிக்குமுண்டு என்றெண்ணாது, நாவின் சுவைப் புலனுக்கு ஆளாகித் தானே முழுதும் உண்டுவிடுதல் நல்ல கணவனுக்குப் பாங்கன்று.

12. மனைவியினிடத்து இவ்வாறு ஒழுகுகின்றவர் உலகில் வேறுயாவர்க்கு என்ன நலன் விளைக்க வல்லார்?

13. பிறர்க்கு கொடுத்து அவரது இன்முகங்கண்டு மகிழும் இன்பம் அறியாதார், தமது உடைப் பொருள்களை இழந்தவரேயாவர்.

14. சிவனடியாரை ஊட்டும் உணவு இறைவன் உண்டதாகும். அடியாரை ஊட்டிய மாங்கனி, இறைவரை வேண்டத் தரப்பட்ட நிகழ்ச்சி இவ்வுண்மையை நன்கு விளக்குவது (1741).

15. இறைவர் ஒருவனுக்குச் செய்யும் பேரருள் பிறர் அறிய விளம்பும் தகைமைத்தன்று (1743).