பக்கம் எண் :

பள்ளிகள் நிறைந்திருந்தன. காஞ்சீபுரம், நாகைப்பட்டினம், மதுரை முதலிய பெரு நகரங் களிலெல்லாம் பௌத்தம் நிலைபெற்றிருந்தது. தமிழ்ப் பிக்குகள் இலங்கை முதலிய வெளி நாடுகளுக்குச் சென்று சமயப் பிரசாரம் செய்து வந்ததுடன், பல பௌத்த நூல்களையும் இயற்றி வைத்தனர். இவர்களுள் தர்மபால ஆசாரியார், ஆசாரிய புத்த தத்த தேரர், போதி தருமர் முதலியோருடைய, புகழ் இன்றும் மங்காது இருந்து வருகிறது. போதி தருமர் காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்று பௌத்த தருமப்பிரசாரம் செய்தவர், மேலும், கோவல னுடைய தந்தையாரான மாசாத்துவர் பௌத்தர். மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு பௌத்தப் பிக்குணியாக வாழ்ந்தாள். இளம்போதியார், சீத்தலை சாத்தனார் முதலிய பல தமிழ்ப் புலவர்கள் பௌத்தராயிருந்தனர். மற்றும் புத்த மங்கலம், போதி மங்கலம், சங்க மங்கலம், புத்த குடி முதலிய பல தமிழ் நாட்டு ஊர்களின் பெயர்களைப் பார்த்தாலே இங்கு பௌத்தம் நிலவியிருந்த பெருமை தெளிவாக விளங்கும்.

தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான ‘மணிமேகலை’ பௌத்த நூல். ‘மணி மேகலைச் சொல்லெலாம் அறம்; பொருளெ லாம் அறம்; மணிமேகலையின் நாடெலாம் அறம்; காடெல்லாம் அறம், புத்தர் பெருமானைத் தமிழிற் காட்டும் ஒரு மணி நிலையம் மணி மேகலை’ என்று தமிழ்ப் பெரியார் திரு. வி. கல்யாணசுந்தரர் அதைப் புகழ்ந்துள்ளார். ‘வளையாபதி’ யும் ‘குண்டலகேசி’ யும் முழு நூல்களாக அகப்படாமலே போய்விட்டன.