இலக்கணக் கொத்து
ஆசிரியர் வரலாறு பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் பெரும் புலவர் மூவருள் மூன்றாமவராக நம்மால் போற்றப்படும் சாமிநாத தேசிகர் திருநெல்வேலியில் சைவவேளாளர் மரபில் தோன்றியவராவர். மாணாக்கர்க்கு ஆசிரியர் கசையடி கொடுப்பினும், அதனை விருப்பாயேற்றுக் கல்வியில் பேரார்வத்துடன் ஆசாற்பணிந்து கல்விகற்றலை மாணாக்கர் விரும்பிய அக்காலத்தில், போதகாசிரியர் கள்ளமின்றி அரிய செய்திகளை மாணாக்கருக்குக் கற்பித்தலில் நாட்டமின்றி வாணாள் கழித்துவந்தனர். அக்காலத்தில் பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் ஒருங்கே அமையப்பெற்ற மயிலேறும் பெருமாள் என்ற சைவவேளாளர் திருநெல்வேலியில் வாழ்ந்துவந்தார். அவரே இவ்வாசிரியருக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஐயந்திரிபு அறக் கற்பித்தவராவர். அக்காலத்தில் வடமொழி தமிழ்மொழி எனும் இரு மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்ற கொள்கை நன்கு நிலவியிருந்ததாதலின், ‘வடமொழியறிவின்றித் தமிழறிவு நிரம்பாது’ என்ற கருத்தான், இவ்வாசிரியர் அம் மாவட்டத்துச் செப்பறைப்பதியில் வாழ்ந்த கனகசபாபதி சிவாசாரியார் என்ற வடமொழிப் பேரறிஞரிடம் வடமொழியையும் நன்கு கற்றார். |