வேற்றுமையியல் வேற்றுமையது தொகை 13 | வினைமுதல் வினையே செயப்படு பொருளே கருவி கொள்வோன் நீக்கம் குறையே இடம்என எட்டும் வடமொழி வேற்றுமை; ஏழ்ஆறு என்று இயம்பும் தமிழ்நூல். |
[வி-ரை: வினைமுதல் - முதல் வேற்றுமை; விளி - எட்டாம் வேற்றுமை; செயப்படுபொருள் - இரண்டாம் வேற்றுமை; கருவி - மூன்றாம் வேற்றுமை; கொள்வோன் - நான்காம் வேற்றுமை; நீக்கம் . ஐந்தாம் வேற்றுமை; குறை - ஆறாம் வேற்றுமை; இடம் - ஏழாம் வேற்றுமை. ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’ ஆதலின், அதனை விடுத்துப் பெயர்ப்பொருளை வேறுபடுக்கும் ஏனைய ஏழுமே வேற்றுமை என்பர். எழுவாயும் விளியும் பெயரும் பெயரது விகாரமும் ஆதலின், அவை தம் முடிக்குஞ்சொல்லொடு முடியும்வழி அல்வழித்தொடராதலின், அவற்றை விடுத்து ஏனை ஆறுமே வேற்றுமை என்பர். ஏழ், ஆறு என்ற கருத்து, தமிழ் நூலாரிடை நிலவுவதுபோல், வியாழன் மரபைச் சேர்ந்தவர் வேற்றுமை ஏழ் என்றும், இந்திரன் மரபைச் சேர்ந்தவர் வேற்றுமை எட்டு என்றும் கூறும் மரபு வடமொழியினும் உண்டு என்பது, ‘ஏழியன் முறையது எதிர்முக வேற்றுமை வேறுஎன விளம்பான் பெயரது விகாரம்என்று ஓதிய புலவனும் உளன்ஒரு வகையான் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ அகத்தியம் என்பதனான் உணரப்படும். புலவன் - வியாழன் என்பர் சண்முகனார்; பாணினி என்பார் ஏனையார்.] 1 |