உரைச்சூத்திரம் எனப் பலரும் ஆளுதலானும், வடநூலாரும் இவ்வாறு கொள்ளுதலானும், இன்னும் பலவாற்றானும் என்க. செய்யுள் என்னும் சொற்குப் பொருள் ஓர்ந்தும் உணர்க. [வி-ரை: நூற்பாவும் உரையும் செய்யுளாதல், ‘பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே’ (தொ. பொ. 391) ‘எழுநிலத் தெழுந்த’ (தொ. பொ. 476) ‘அவைதாம், நூலினான’ (தொ. பொ. 477) என்ற தொல்காப்பிய நூற்பாக்களானும் உணரப்படும். விக்குள், பாய்த்துள் என்பனபோலச் செய்யப்படுவது செய்யுள் என உள் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று நின்றது. இவர் விளக்கும் முறையே பதசாரம் எழுதும் முறையும் இவர் மாணாக்கரான சங்கரநமசிவாயப் புலவருக்கு நன்னூல் உரை எழுதப் பெரிதும் பயன்பட்டுள்ளமை காண்க. தமிழ்மொழி வல்லவராய், வடமொழி இயல் உணர விரும்புவார்க்கு இந்நூல் நன்கு பயன்படுமாறும் அறிக.] 45 ஒழிபியல் முற்றும். இலக்கணக்கொத்துரை முற்றும்.
|