உரை நலன்கள் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கணப் பெரும் புலவர்களாகிய மூவரும் முறையே வைத்தியநாத தேசிகர், சுப்பிரமணிய தீக்கிதர், சாமிநாததேசிகர் என்பாராவர். அவர்கள் இயற்றிய நூல்கள் முறையே இலக்கணவிளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து என்று பெயரிடப்பட்டுள்ளன. இவற்றுள் பின்னைய இரண்டும் சிறப்புப்பற்றிச் சொல் இலக்கணமே நுவல்வனவாம். இந்நூல்களின் தனிச் சிறப்பு இந்நூலாசிரியர்களே இந்நூலுகளுக்கு உரையும்வரைந்தமையாம். இலக்கணவிளக்கத்தில் போல, நூற்பாக்களுக்குப் பொழிப்புரை ஏனைய இந்நூல்களிலும் காணப்பெறவில்லை பிரயோக விவேகத்தில் நூற்பாக்களின் போந்த பொருள் குறிக்கப்படவும், இலக்கணக்கொத்துள் அதுவும் இடம் பெற்றிலது. மேலும் பின்னைய நூல்கள் இரண்டும் அவ்வவ்வாசிரியர் யாத்த நூற்பாக்களையே உடையன. எடுத்துக்காட்டுக்களின் விளக்கங்கள் கொண்டே நூற்பாச் செய்திகள் நுணுகி உணரப்பட வேண்டிய நிலையில் இலக்கணக்கொத்து உள்ளது. பதினேழாம் நூற்றாண்டுகாறும் வளர்ந்த செய்யுள்மரபு பற்றிய செய்திகள் பலவும், உலகவழக்கச் செய்திகள் சிலவும் பிரயோகவிவேகத்தில் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இலக்கணக் கொத்துப் பெரும்பாலும் உலக வழக்கில் வளர்ச்சியுற்ற தமிழ் மொழிச் சொல், சொற்றொடர் பற்றிய செய்திகளையே விளக்கிச் செல்கிறது. ‘இந்நூற்கு உதாரணம் தொன்னூல் செய்யுளுள் சிலவே எழுதினம்; பலவே எழுதினம் உலக வழக்கினுள் உணரும் பொருட்டே.’ - இ.கொ. 12 என்ற நூற்பாவை நோக்குக. |