பக்கம் எண் :

   

இலக்கணக் கொத்து நூல்

இந்நூல் கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறைச் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. இது தொல்காப்பிய இலக்கண நூலினும் தொல்காப்பியங்களிலும் அருகிக்கிடந்த விதிகளைப் பெருகத் திரட்டி வடமொழி இலக்கண வழக்கும் சில விராய்க் கூறும் நூலாகும். இது வேற்றுமையியல், வினையியல், ஒழிபியல் என்னும் மூன்றியல்களாய்ச் சொல்லிலக்கண நுட்பம் தெள்ளிதின் துறைப்படுத்து உணர்த்தும் ஒரு சிறப்புடை நூலாகும்.

- திராவிடப் பிரகாசிகை.

********
   

இலக்கணக் கொத்து நூல்

சிறப்புப் பாயிரம்

மதிவெயில் விரிக்கும் கதிர்எதிர் வழங்காது
உயர்வரை புடவியின் அயர்வுற அடக்கித்
தென்புவி வடபுவி யின்சமம் ஆக்கிக்
குடங்கையில் நெடுங்கடல் அடங்கலும் வாங்கி
ஆசமித்து உயர்பொதி நேசம்உற்று இருந்த
மகத்துவம் உடைய அகத்திய மாமுனி
தன்பால் அருந்தமிழ் இன்பால் உணர்ந்த
ஆறுஇரு புலவரின் வீறுஉறு தலைமை
ஓல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி
தன்பெய ரால்உலகு இன்பஉறத் தரும்நூல்
உளம்கூர் உரையாம் இளம்பூ ரணமும்
ஆனா இயல்பின் சேனா வரையமும்
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க் கினியமும்
மற்றமற்று இடப்பொருள் முற்றும் உணர்ந்தும்
நன்னூல் முதலிய சின்னூல் தெரிந்தும்
தொல்காப் பியங்கள் பல்கால் பயின்றும்
அவைகளின் அருகிய நவையறு விதிகளும்
வடமொழி இலக்கணக் கடல்முடிவு உடையவும்
கற்பவர்க்கு எளிதி னில்புலப் படவே
மதியினின் மதித்துமூன்று அதிகாரம் ஆக்கிப்
புலக்கணத்து எனஉலகு இலக்கணக் கொத்துஎன்று
ஒருபெயர் இட்டுத் திருவுளம் பற்றினன்
வளமையின் வளர்புகழ் அளவிய புனல்நாட்டு
ஏஅடு விழிஉமை ஆவடு துறையில்