பாயிரவியல் விநாயக வணக்கம் 1 | தேக பந்தம் தீர்ந்துஅருள் பெறவே ஏக தந்தன் இணையடி பணிவாம், |
வி-ரை: உடல் தொடர்பு நீங்கி அருள் பெறுவதற்காக ஒற்றைக்கொம்புடையவனாகிய விநாயகனுடைய திருவடிகள் இரண்டனையும் வணங்குவோமாக. 1 சிவ வணக்கமும் முருகன் வணக்கமும் 2 | கற்றைச் செஞ்சடைக் கண்மூன்று உடையனை ஒற்றைச் செங்கதிர் வேலனை உள்குவாம். |
வி-ரை: கற்றையாக அமைந்த சிவந்த சடையினையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமானையும் ஒன்றாகிய கதிரவன்போல ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானையும் உடல் தொடர்பு நீங்கி அருள் பெறுமாறு மனத்தால் வழிபடுவோமாக. ‘தேகபந்தம் தீர்ந்து அருள்பெற’ என்ற தொடரை இந்நூற்பாவின்கண்ணும் கூட்டிப் பொருள் செய்க. 2 ஞானகுரு வணக்கம் 3 | ஊரும் பேரும் உருவும் இல்லான் ஆயினும் திருவா வடுதுறை ஊர்அணைந்து அம்பல வாணன் எனும்பெயர் ஆதரித்து அறிவே உருவாய் அமர்ந்தகுரு ராயனைப் பொறையுடல் போகப் புகழ்ந்துஅடி போற்றுவாம். |
|