பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்221

கவிதை எனும் வார்த்தைக் கூட்டம் பற்றி

ந்தக் கட்டுரை குறிப்பிட்ட எந்த வடிவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதல்ல. மன விளிம்பிலிருந்து என்ன தெரிகிறதோ அவை மட்டும் பதிவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நேரங்களில் கவிதை பற்றி யோசித்துக்கொண்டிருப்பதால் கவிதை பற்றிப் பேசுவது சுலபமாகிறது. மேலும் நல்ல கவிதைகள் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புவதால் என்னுடைய விஸ்தீரணம் அல்லது பரப்பளவு எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. இங்கே கவிதை என்றால் என்ன என்று எனக்குப் புரிந்துகொண்ட அளவில், அனுபவித்த அளவில் மட்டுமே கூறுகிறேன். இதனை வளப்படுத்தக்கூடிய கவிதை ஆகிருதி உள்ளவர்கள் இருக்கிறார்கள். நான் இவர்கள் எல்லாம் நல்ல கவிஞர்கள் என்று ஒரு பட்டியல் தரப்போவதில்லை. மனத்தில் தைத்த சில வரிகள் மட்டுமே கட்டுரை இறுதியில் எடுத்துக்காட்டப்படும்.

குறிப்பிட்ட வடிவத்தில் அச்சாவதெல்லாம் கவிதை என்ற மாயை தகர்ந்தபிறகு, கவிதை அணுகுவதற்கும் கூடியமட்டிலும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாகிறது.

கவிதையை, நல்ல கவிதை கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது. அதனுடைய ஸ்திரமின்மையால், கண்ணை உறுத்தும் அழுத்தமான வண்ணங்களால், அனுபவ வறட்சியால், கூச்சல் போடுவதால், இன்னும் பிற அழிந்து போன செயற்கையான வார்த்தைக் கூட்டங்களால்.

கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. கவிதை தெளிவாகச் சில சந்தர்ப்பங்களிலும் தெளிவற்று (நல்ல பொருளில்) மற்ற நேரங்களிலும் செயல்படுகிறது. இவை இரண்டிற்கும் ஒரே இலக்கணம்தான் பின்னணியாக இருக்கிறது. தெளிவு என்பது காலத்திற்குக் காலம் மாறுபடும் ஒன்றாகையால் கவிதையும் மாறுபடும் வினோதமான வண்ணக் கலவையாக தன்னை ஆக்கிக்கொள்கிறது. காலக்கணக்கில் வரும் கவிதைகள் தெளிவென்றும் காலக்கணக்கிற்குள் வராத கவிதைகள் தெளிவற்றவையென்றும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றன. இங்கே காலத்தைப் பற்றிப் பேசுவது அல்ல என் நோக்கம். கவிதைகள் பற்றி மட்டும்தான்.