பக்கம் எண் :

134எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘என் தோழி
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.

என் தோழியினிடம் அரிய மழையைத் தருவிக்கும்படி வேண்டிக்கொண்டாலும் அதைப் பெய்யும்படி செய்யும் பெருமையுடையவள்’’ (பா. 39)

‘‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை’’ என்ற குறளில் இக்கருத்தமைந்திருப்பதைக் காணலாம்.

‘‘விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்,
அருநெறி ஆயர் மகளிர்க்கு,
இருமணம் கூடுதல் இல் இயல்பன்றே.                              (பா. 114)

இவ்வுலகமே பரிசாகக் கிடைத்தாலும் சிறந்த ஒழுக்கத்தையுடைய ஆயர்குலப் பெண்கள் முதலில் காதலித்த கணவனைக் கைவிட்டு, மற்றொருவனை மணத்தலாகிய இருமணம் புரிந்து கொள்ளுதல் அவர்கள் குடிப்பிறப்பின் தன்மையன்று’’.

பெண்கள் அருந்ததியைப்போல் பிறர் நெஞ்சு புகாதவர்களா யிருக்கவேண்டும்; மழையைப் பெய்யச் செய்யும் தெய்வீக சக்தி படைத்திருக்க வேண்டும்; முதலில் காதலித்த கணவனைக் கைவிட்டு மற்றொருவனை மணம் புரிந்துகொள்ளுதல் கூடாது. இவைகளே பெண்களின் கடமை; கற்புடைமை. இவ்வாறு பண்டைத் தமிழர்கள் கருதினர்.

வேதம், வேள்வி, அந்தணர்

சங்ககாலத்திலும் அதற்கு முன்னும் வேதங்களைப் படிக்கும் அந்தணர்களும், வேள்வி செய்யும் அந்தணர்களும் தமிழ்நாட்டிலே வாழ்ந்தனர். அவர்கள் தமிழர்களாகவே வாழ்ந்தனர். தந்நலந் துறந்து, எல்லாவுயிர்களும் இன்புற்று