பக்கம் எண் :

16எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பண்டைத்தமிழ்ப் புலவர்கள் ஒரு ஊரைப்பற்றியோ ஒரு மலையைப்பற்றியோ குறிப்பிடும்போது அவற்றில் அக்காலத்திலிருந்த சிறப்பைப்பற்றிச் சொல்லாமல் விடமாட்டார்கள். வேங்கடமலையைப் பற்றிய பாடல்களிலே அது ஒரு திருமால் திருப்பதி என்று குறிக்கப்படவில்லை. இன்றிருப்பதுபோல் அது ஒரு சிறந்த திருப்பதியாக இருந்திருந்தால் அதைப்பற்றிச் சொல்லியே யிருப்பார்கள். ஆதலால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு வேங்கடம் இன்றிருப்பதுபோன்ற புகழ்பெற்ற திருப்பதியாக இல்லை என்றுதான் எண்ணவேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுகு என்பது தனி மொழியாக வழங்கி வந்திருக்கின்றது. வடுகர் வாழ்ந்த நாட்டை ‘‘மொழிபெயர்தேம்’’ என்று அகநானூற்றுப் பாடல்கள் குறிக்கின்றன. வேற்றுமொழி வழங்கும் நாடு என்பதே இதன் பொருள். அக நானூற்றுப் பாடல்களைப் படிப்போர் ‘‘தெலுங்கு தனி மொழியன்று; தமிழிலிருந்து பிறந்தது’’ என்று சொல்லும் ஆராய்ச்சியுரையை ஒப்புக்கொள்ளப் பின்வாங்குவர்; இவ்வாராய்ச்சி உண்மையாக இருக்க முடியுமா என்ற ஐயம் எழாமற்போகாது.

பரிபாடலிலே திருப்பரங்குன்றத்தைப் பற்றியும் பாடப் பட்டிருக்கின்றன. திருமாலிருஞ்சோலையைப் பற்றியும் பாடப் பட்டிருக்கின்றன. பரிபாடற்காலமும் திரு முருகாற்றுப் படைக்காலமும். ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். திருமுருகாற்றுப் படையிலே காணப்படும். ‘‘பழமுதிர் சோலை’’ என்பதை அழகர்மலை என்று கூறுகின்றனர் சிலர். இவ்வாறு கூறுவதற்கான ஆதரவு சங்க நூல்களில் காணப்படவில்லை. திருமுருகாற்றுப்படை தோன்றிய காலத்திலேயே அழகர்மலை திருமாலிருஞ்சோலை என்ற பெயரில் புகழ்பெற்ற