பக்கம் எண் :

176எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்ற பெயரால் ஒரு உரை நடைச் செய்யுள் உண்டு. அதிலே அந்தப் பத்துப் பாடல்களின் தலைவனாகிய சேரனுடைய பெருமையும், வரலாறும் தொகுத்துச் சொல்லப்பட்டிருகின்றன.

இந்நூலில் உள்ள பதிகங்கள் நூலாசிரியர்களால் சொல்லப் பட்டவையல்ல. அவைகள் நூலாசிரியர்களால் நுவலப் பட்டிருக்குமாயின், இந்நூலுக்குப் பதிற்றுப்பத்து என்ற பெயரே ஏற்பட்டிருக்க முடியாது. ஆதலால் அப்பதிகங்கள் பிற்காலத்தாரால் சேர்க்கப்பட்டவைகளாகவே இருக்கவேண்டும். அப்பதிகங்கள் உரையாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

இது, புறப்பொருள் பற்றிய நூல், சேர மன்னர்களின் பெருமையைச் சிறப்பித்துரைப்பது; அவர்களுடைய வீரம், கொடை, அரசியல் நேர்மை ஆகிய அனைத்தையும் இந்நூற் பாடல்களிலே காணலாம். பண்டைத் தமிழர்களின் கொள்கை, நாகரிகம் இவற்றை இப்பாடல்களில் பார்க்கலாம்.

பண்டைத்தமிழ் மூவேந்தர்களிலே சேர மன்னர்களே சிறந்த வீரர்கள்; அவர்கள் கொடி, விற்கொடியாக அமைந்திருப்பதே, இவ்வுண்மையை விளக்கும். பாண்டியர் கொடி மீன்; சோழர் கொடி புலி; சேரர் கொடி வில்.

பாண்டிய மன்னர்களிலே நெடுஞ்செழியன் ஒருவனே மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்னும் இரு நூல்களுக்குத் தலைவன். சோழ மன்னர்களிலே கரிகாற் சோழன் ஒருவனே பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை என்னும் இரு நூல்களுக்கும் தலைவன். பாண்டிய மன்னர்களிலே பல வீரர்கள் இருந்தனர்; சோழ மன்னர்களிலே பல வீரர்கள் இருந்தனர். அவர்கள் பல புலவர்களால் பாடப்பட்டவர்கள்;