பற்றியுமே பாடுகின்றன. முருகனைப் பற்றிய ஒருபாடல் மட்டும் எந்த இடத்தையும் குறிப்பிடவில்லை.  திருமாலைப் பற்றிய பாடல்களிலே ஒன்று திருமாலிருஞ்சோலையைப் பற்றிப் புகழ்ந்து பாடுகின்றது. "நீண்ட நெடுங்காலமாகத் திருமால் அம்மலையிலே வீற்றிருக்கின்றார். அவரை வணங்கி வழிபடுவோருக்கு அவர் நல்லுலகத்தை அளிக்கின்றார். திருமாலிருஞ்சோலைமலை திருமால் வீற்றிருப்பதனாலே மலைகளிலே சிறந்த மலையாக விளங்குகின்றது" என்று கூறுகிறது அப்பாடல்.  பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் கடைச்சங்க காலத்து நூல்கள். பத்துப்பாட்டில் உள்ளது திருமுருகாற்றுப்படை. எட்டுத்தொகையில் உள்ளது பரிபாடல். ஆகவே திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் ஏறக்குறையை ஒரேகாலத்து நூல்கள். பரிபாடலில் அழகர்மலை திருமாலிருஞ்சோலையாகவே காணப்படுகின்றது. முருகன் திருப்பதி என்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. ஆகையால் பழமுதிர்சோலைமலை என்பது அழகர்மலையென்று முடிவு செய்வதற்குப் போதுமான ஆதரவில்லை.  அழகர்மலை பழமுதிர்சோலைமலை என்ற பெயரில் முருகன் திருப்பதியாகவும் இருந்திருக்கலாம். அதுவே திருமாலிருஞ்சோலைமலை என்ற பெயரில் திருமால் திருப்பதியாகவும் இருந்திருக்கலாம் என்போரும் உண்டு. இவர்கள் கூறுவது பொருத்தமாக இருக்கின்றது. இதற்குப் பழைய நூல்களின் ஆதரவு ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் கூறுவது உண்மையாக இருக்குமானால் மாமனும், மருமகனும் ஒரு மலையிலே வீற்றிருப்பதைப் பண்டைப் புலவர்கள் பாடாமல் விட்டிருக்கமாட்டார்கள்.   |