பக்கம் எண் :

 

1
புதுக் கருத்துப் படையல்


“பாரடா உனது மானிடப் பரப்பை!” என்ற விரிந்த நோக்கினைப் படைத்துக் காட்டும் பாவேந்தர், யாக்கை நிலையாமையில் நம்பிக்கை கொண்டு வேதாந்த பாடங்கேட்டவர் தம் இளமைக் காலத்தில்! அப்படிக் கற்றறிந்த செறிவு அவருடைய பாடல்களில் ஒளிரக் காணலாம். ஏதோ ஓர் உலகில் இன்புற்று வாழ இந்தப் பிறவியில் இன்ன இன்ன செய்தல் வேண்டும் என்று “பாடம்” புகட்டுவதில் நம்பிக்கையற்று, மனிதப் பிறவி ஒவ்வொன்றும் செயல் திறன் கொண்டு தொண்டாற்ற வேண்டும் என்ற புதிய நோக்கை மேற்கொண்ட கால முதலாக அறிவோடும் துணிவோடும் எப்படியெல்லாம் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும் என்பதை நுட்பமாக அறிவுறுத்தலானார் நம் கவிஞர்.

சாதி மத பேதங்கள், மூட வழக்கங்கள் கந்தக வீட்டில் இடும் கொள்ளிகள் என எடுத்துக் காட்டினார். “மானிடம் போற்ற மறுக்கும் ஒரு மானிடன் தன்னைத் தன் உயிரும் வெறுக்கும்” என்பன போன்ற துணிவூட்டும் கருத்துக்களையே படைத்தார்.

தன்னம்பிக்கை ஒழிந்த தமிழனை அவர் சாடினார், தளர்ந்த நடை கண்டால் அதனை நிமிர்ந்திடப் பாடினார். மானிடம் போற்றுவதில் அவர் வாழ்வே சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கிற்று. நடையிலோ எழுத்திலோ பேச்சிலோ செயலிலோ தளர்ச்சி சிறிதும் காட்டாத நம் பாவேந்தர், தமிழன் எனும் தருக்குடன் வாழ்ந்தவர்.