பக்கம் எண் :

133

32
தமிழுக்கு ஆபத்து


(கிண்டற்காரன்)

சென்னை ஹிந்தி வித்யாலயத்தில் எவரோ காந்தியின் தோழராம். அவர் பெயர் காகாகலெல்கார் என்பதாம். அவர் சொல்லுகிறார்:-

ஹிந்தி பாஷையே இந்தியாவின் தேசீய பாஷையாக இருக்க முடியும் என்கிறார். ஏன்? இந்தி, உமக்கும் காந்திக்கும் நடுவீட்டுக் காமாட்சியம்மன் விளக்காக இருக்கலாம். எங்களுக்கு வியர்க்கிறதோ?

இந்தி கற்றுக் கொள்ளச் சொல்வதாலேயே அந்தந்த மாகாண பாஷைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் சொல்வதாகக் கொள்ளலாகாது என்கிறார்.

இந்தியாவின் ஆதிமொழியாகிய தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்பது காந்தியடிகளின் கருத்து. வடநாட்டாருக்கு இயற்கையில் தென்னாட்டு நாகரீகத்தின் வேரையே கல்ல வேண்டும் என்பதற்கு அவர்கள் இன்று வரைக்கும் தமிழரை ராக்ஷசர்கள் என்று சொல்லி வருவதே ஓர் அத்தாக்ஷியாகும். சுயராஜ்யம் என்ற குப்பைக் குள்ளிருக்கும் ஆபாசச் சூழ்ச்சியில் இதுவும் ஒன்று என்றால் அது பிறகு தெரியும்.

தமிழ் முதலிய பாஷைகளில் இலக்கியம் அதிகமிருப்பது கண்டு சந்தோஷப்படுகிறோம் என்கிறார். அதிகமிருக்கும் காரணத்தாலேயேதான் அதை வேர் கல்ல உமக்கு எண்ணம்.