பக்கம் எண் :

146

36
இனி என்ன செய்யப் போகிறீர்கள்?


ஒரு குடும்பத்தின் லாப நஷ்டத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளும், அந்தக் குடும்பத்தினரின் மனோபாவமே தேசகாரியத்தில் பொறுப்பேற்க வேண்டிய தேசமக்களுக்கும் தேவை. குடும்பத்தினர்க்குத் தங்கள் குடும்ப நிலையில் எவ்வளவு விவேகந் தேவையோ, தேசநிலையில் தேச மக்கட்கு அத்தனை விவேகம் வேண்டும். ஒற்றுமையற்ற குடும்பம் ஒருமிக்கக் கெடும் என்றபடி குடும்ப நன்மைக்குக் குடும்பத்தினரின் ஒற்றுமை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஒற்றுமை தேச நன்மையின் பொருட்டுத் தேச மக்களுக்கு இருத்தல் வேண்டும். குடும்பத் தலைவனாலேயோ மற்றவர்களாலேயோ பேதப்படுத்தப்பட்ட குடும்பமானது முன்னேற்றமடையாமல் இடர்ப்படுவது போலவே பேத புத்தியுள்ள தேச மக்களால் தேசமுன்னேற்றந் தடைப்படும் என்பதோடு மிகுதியும் இடர்ப்பட்டே தீரும்.

இன்றைய நிலையில் நம் தேசமக்கள்பால் தேசம் தங்களுடையது; தேச நன்மை தீமையில் தமக்குப் பங்குண்டு என்ற மனோபாவமானது சுடர்விட்டு எழுகின்றதா? இவ்விஷயத்திற்கு அடிப்படையாக இருக்கவேண்டிய கல்வி தேடப்பட்டிருக்கிறதா? தேசமக்களுக்கும் தேசத்திற்கும் உள்ள சம்பந்தா சம்பந்தங்களில் விவேகம் ஏற்பட்டிருக்கிறதா? தேசமக்களின் ஒற்றுமை எந்த நிலையில் உள்ளது? எத்தனை பேதங்கள்! வாழ்க்கை முறையில் எவ்வளவு கோணல்கள்! இவைகளைச் சிந்திக்கும் அறிஞர் கண்ணீர் விட்டுக் கதறாமல் இருக்க முடியுமா?