49 எழுத்துச் சிக்கனம்
உயிர் 12, மெய் 18, உயிர்மெய் 216, ஆய்தம் 1. இத்தனை எழுத்துக்கள் தமிழில் இருப்பதால் மிகத் தொல்லையாய் இருக்கிறதென்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது சரிதான். எழுத்துக்களின் வரி வடிவத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். ‘ஆம்’ என்று நாமும் கூறுகிறோம். வரி வடிவங்களைக் குறைக்க வேண்டிய முறையைப் பற்றிப் பலர் பலவாறு கூறுகிறார்கள். கூறுகிறவர்கள் எல்லாம் பொதுநலங் கருதியே கூறுகிறார்கள். அதில் இம்மியும் ஐயமில்லை. தமிழ் டைப்ரைட்டிங் மெஷினில், மிகப் பல எழுத்துக்கள் அமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் அந்த மெஷின், மற்றவைகளைவிட மிகப் பெரிதாகி விடுகிறது. அச்சுக் கூடத்தில் எழுத்துப் பெட்டிகளின் அறைகளோ மிகமிக; ஒரே திண்ணையளவு பெரியதாக அமைய வேண்டியதிருக்கிறது. கை, ளை என ஒரே இனத்தில் இரண்டு வகை. கை என்பது போலவே ளை என்றும் இருந்தால் என்ன முழுகிவிடும்? க. இது குறில். கா. இது நெடில். ஆனால் உ இது குறில், ஊ இது நெடில். இத்தனை தொல்லை? உ குறில் உா நெடில் என்றால் ஏன் பொருந்தாது? இப்படிச் சிலர் கேட்கிறார்கள். |