52 தமிழன் யார்?
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பேசுகின்றவனாகலாம். தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீட்டுக்காரனாக இருக்கலாம். இக்காரணங்களைக் கொண்டு அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும். அவனை நோக்கி உனது தாய்மொழி எது என்று கேட்டால் அதற்கவன், என் தாய்மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி அல்லது பிரான்சு அல்லது ஆங்கிலம் என்பானானால் அவனைத் தமிழன் பட்டியலில் சேர்ப்பது இழுக்கு. தமிழ்நாட்டைத் தாய் நாடாகக் கொண்டவன் தமிழன். ஒருவன் ஆயிரமாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருந்து வரலாம்; அவன் தமிழன் என்று சொல்லிக் கொள்ளலாம். அவன் தமிழ்நாட்டில் தன் புகழை நாட்டியிருக்கலாம். தன்னை நோக்கித் தமிழரை மிதித்துக்கொண்டிருக்கும் பகை நாட்டின் செயல் அறமா என்று கேட்டால் அறமே என்பான். தான் என்ன நினைக்கின்றான்? தமிழனுக்குப் பகை நாட்டினனாயிருந்தாலும் நம்மை ஆதரிக்க நம்முறவு நாட்டான்தானே என்று எண்ணுகின்றான். தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கம் கொண்ட என் நண்பர் ஒருவர் இரண்டாவது உலகப் போர் நடந்தபோது சென்னையில் இருந்த வடநாட்டார், தம் வடநாட்டை நோக்கி ஓடிவிட்டார்கள். அப்போதும் தென்னாட்டை விட்டுப் பார்ப்பனர் ஓடவில்லை. ஆதலால் பார்ப்பனர் தமிழரே என்று கூறினர். |