பக்கம் எண் :

220

53
திரைப்பட எழுத்தாளர் சங்கம் அடிப்படை நோக்கம்


இச் சங்கத்திற்குள்ள அடிப்படை நோக்கம் கீழ் வருமாறு அமைதல் வேண்டும்.

(1) கதை - பிறர் எழுதியதையே தேடிப் பிடிக்க வேண்டும். அந்தக் கதை இன்னாரால் எழுதப்பட்டது என்று தெரியாதிருக்கச் சிறிது மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்றை மட்டும் மறவாது பின்பற்ற வேண்டும். இன்னார் எழுதிய கதையைத் தழுவியோ, மாற்றியோ எழுதியதாக வெளிக்குத் தெரியவே கூடாது. தெரிந்தால் பட முதலாளியிடம் மதிப்புக் குறைவு ஏற்படும். கதைக்குப் பணம் கொடுக்கவும் மறுப்பார்கள்.

(2) பேச்சமைப்பு - பிறர் எழுதிய செய்யுள் நூற்களையும், உரைநடை நூற்களையும், அவை வெளிவந்தவுடனே வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. கருத்தாகப் படிக்க வேண்டும். பேச்சு எழுதும்போது அந் நூற்களிலிருந்து சொற்றொடர்களை எடுத்துத் தாம் எழுதியது போலவே எழுதிக் கொள்ள வேண்டும். இதில் மானமோ, நாணமோ இருக்க வேண்டியதில்லை. இன்னார் நூற்களிலிருந்து திருடினேன் என்று எந்த எழுத்தாளனாவது சொல்லி வைத்தால் அது எழுத்தாளர் கூட்டத்திற்கே குறைவை ஏற்படுத்தும்.

(3) பாட்டு - பிறர் பாட்டினின்று அடி அடியாய் அல்லது தொடர் தொடராய் எடுத்துக் கொள்ளலாம்.