56 இவர்களைப் பாருங்கள்
தமிழ்த் தாயின் தலையை வெட்டக் கத்தி தீட்டுகின்றார்கள் சில தமிழர். தாயின் பகைவர்களைத் தட்டிக் கொடுக்கின்றார்கள் சில தமிழர். அன்னை அழுகுரல் கேட்கும் அடுத்த தெருப்பக்கம் நடையைத் திருப்புகின்றார்கள் பல தமிழர். தமிழன்னையின் தாழ்வு நிலை கேட்டு, அப்படி ஒருதாய் இருப்பதே தெரியாதென்று கைவிரித்துச் செல்கின்றார்கள், மற்றும் பற்பல தமிழர்கள். தம்மைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளவே நாணிச்செல்கின்றனர் சில அயல்மொழிவல்ல தமிழர்கள். சின்னஞ்சிறிய நோக்கங்கள் கொண்ட தமிழ் நிறுவனங்கள் தோன்றுகின்றன; தோன்றிய அதிலேயே தூங்கிவிடுகின்றன. ஒற்றுமை கெட்டு மாய்ந்து விடுகின்றன. (அ) நம் தாய் மொழியையும் அதன் தொடர்புடைய கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் ஆகிய மொழிகளையும் எல்லோரும் படிக்கும்படி செய்யவும், ஆராய்ச்சி செய்து உலகின்முன் வைக்கவும் முன்னுக்குக் கொண்டு வரவும் தமிழர்கள் ஆவன செய்ய முற்பட்டதுண்டா? (ஆ) உலகுக்கு முதற்கண் தமிழர் அருளிய அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய தமிழ் நான்மறை பற்றியும் அதனோடு தொடர்புடைய தமிழ்த் தத்துவநூல், இலக்கியங்கள் பற்றியும் ஆராய்வதும், ஆராய்வதற்கு ஊக்கம் ஊட்டுவதும் தமிழரின் முதல் வேலையன்றோ! |