| 
 பெண்கள் அனைவரும் பல ஜன்மங்களில் பல பேரை மணந்த விதவைகள்தாம் என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்கள். இவர்கள் அந்த விதவைகட்கு ஒருவனை மணம் முடித்து - அவன் இறந்தால் இன்னொருவனை மணம் முடிக்க ஏன் மறுக்க வேண்டும்?  யுத்த காலத்தில் ஒரே முறையில் பல லக்ஷம் யுத்த வீரர்களைப் பறிகொடுத்த நாடுகள் பல உண்டு. அந்நாடுகள் எல்லாம் கணவன் இறந்தபின் அவள் வேறு ஒருவனை மணக்கக் கூடாது என்ற உன்னதக் கொள்கையை ஒப்புக் கொண்டிருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும். அடுத்த யுத்தத்திற்கு அந்நாடுகள் புதுவைக் குசப்பாளயத்து மண் பொம்மைகளைத்தான் யுத்த வீரர்களாக அனுமதிக்க வேண்டும்.  இனி, அக்காலத்தே சுயமரியாதை ஒளிபெற்ற ஆடவர் சிலர் கலப்பு மணம் புரிந்து கொள்ளத் தாமே முன்வருவது போல் தன் மகள் வேறாகிய சாதிக்காரனையும்  அவன் விவேகத்தைக் கருதி அவனை மணந்து கொள்ளப் பெண்களும் தாமாக முன்வர வேண்டும். இவ்விஷயத்தில் சமூகம் ஆதரவுகாட்ட வேண்டும். ஒரு கலப்பு மணத்தால் இரண்டு குடும்பம் தம் மூடத்தனமாகிய ஜாதிக் கொள்கையினின்று விடுபடுகின்றன. நாட்டின் சமத்துவத்திற்கும், ஆடவர் பெண்டிர் சமத்துவத்திற்கும் கலப்புமணம் ஏற்ற வழியாகும்.   “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். வைய வாழ்வு தன்னிலெந்த வகையிலும் நமக்குளே; தாதரென்ற நிலைமைமாறி ஆண்களோடு பெண்களும்; சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே”   (பாரதி) புதுவை முரசு, 17-11-1930. முழக்கம் 1 ஓச்சு: 2 * |