ஆசை கொள்ளும் அத்தனை பொருளையும் மூன்றாகக் கூறுவர். அவை மூவாசை, அவையாவன: பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை. ஆசைக்குரிய மூன்று வகைப் பொருள்களுக்கும் முதலாக வைக்கப்படுவது பொன்னாசை. ஆசையை இழுக்கும் மண்ணினும் பெண்ணினும் பொன்னே சிறந்தது என்பதும் இதனால் அறிய வேண்டும். இது பொய்யன்று. ஏன்? மண் ஒரு நாட்டிற்கு ஒரு மதிப்பு. பெண்ணும் அப்படியே. பொன் அப்படியல்ல. எங்கும் எப்போதும் பெருமதிப்பு. மண்ணின் நிலை மாறும்! எடுத்துக்காட்டாக விளை நிலம் ஒன்று; விளையாத நிலம் ஒன்று. மணல் மேடு ஒன்று, படுகுழி ஒன்று. பொன் கொழிக்கும் நிலம் ஒன்று. எரிமலை நாடு ஒன்று. பெண் பற்றியும் இவ்வாறு எண்ணிப் பார்க்க. அழகிய பெண் ஆதலின் மதிப்புடையாள். ஆனால் நோயில் வீழ்ந்து விட்டால்? ஒழுக்கம் கெட்டால்? பொன்னின் நிலையான மதிப்பு மாறுவதில்லை. அழகு மாறுவதில்லை. பொலிவு மாறுவதில்லை. ஒளி மாறுவதில்லை. விலை மாறுவதில்லை. எடை மாறுவதில்லை. நயப்பு மாறுவதில்லை. தில்லைக் கோயில் மதில் அதனுள்ளிருக்கும் சிவபெருமானால் மதிப்படைவதில்லை. அம்மதிலின்மேல் திகழும் பொற்குமிழ்களால் மதிப்படையும். உலகை ஆளும் உருவப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் அழகு தந்து, மதிப்புத் தந்து, ஒளி தந்து ஆள்வது பொன்னே ஆகும். |