63 வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது?
கருநடர் வேந்தன் என்பான் மதுரையை வௌவிப் பாண்டிய அரசைக் கைப்பற்றுவதற்குமுன் (அஃதாவது ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்) தமிழகத்தில் தமிழரசர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள் கிடைத்திலது. ஆயினும் இவ்வைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே வடநாட்டிற் பலவகையான கல்வெட்டுக்கள் பயிலப்பட்டு வந்தமை காணக் கிடக்கின்றன. இதுகொண்டு முன்னாளிருந்த தமிழர்களுக்கு எழுத்து எழுதத் தெரியாதென்றும், வடக்கிருந்த பல்லவ அரசர்கள் தமிழ்நாட்டினும் புகுந்த பின்னரே தமிழர் எழுதக் கற்றாரென்றும் மேற்போக்காளர் சிலர் கூறாநிற்பர். இஃது ஆய்வுப் போக்கில் ஒட்டி நிற்பதன்று. போர்க்களத்தில் புறங்கொடாது எதிர்த்து நின்று வீழ்ந்துபட்ட மறவர்க்கு அற்றை நாளில் அவர்தம் பெயரும் பீடும் எழுதி நினைவாகக் கல்நடுதல் மரபென்பதை ஆசிரியர் தொல்காப்பியனார், தொல்காப்பியம் புறத்திணையியலில் “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல்என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர”
என்று ஓதுமாற்றானும், அகநானூற்றில் நோய்பாடியார் என்பார், |