9 வெண்ணெய் வாழைதான்
சட்டாண் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர். நான் ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும் போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார்:- பழம் ஒன்று முக்கால் முழநீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம் வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய்தான் மீதியிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகிவிடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்!” பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்து வரப்போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் ‘அந்த மரந்தான் இது’, என்று தரையைக் காட்டினார். நான் தரையை குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நிகளத்தில் பலா இலையையும் ஒத்த ஐந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்! “என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? ” என்று கேட்டேன். |