15 ஸ்ரீ சுஜனரஞ்சனியின் துயரம்
19.3.31இல் வெளிவந்த ரஞ்சனியின் இதழில் “சுயமரியாதைக் கட்சியினர் நம் முன்னோர்களை மூடர்கள் என்றும், சில கபடிகளால் ஏமாற்றப்பட்டு விட்டனர் என்றும் கருதுகிறார்கள். இது எவ்விதத்திலும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயமன்று. ஒரு தேசத்திலே எல்லோரும் புத்திமான்கள் என்பதாக நாம் சொல்ல வரவில்லை. ஆனால் எல்லோருமே மூடர்கள் என்பதைத்தான் நாம் ஆக்ஷேபிக்கிறோம்” என்று எழுதப்பட்டிருக்கிறது. நம் முன்னோரில் ஒருவர் தவறாமல் மூடர்களே என்று சுயமரியாதைக்காரர் சொல்லவில்லை; எண்ணவில்லை. புராதன காலத்தில் தமிழர்கள் ஜாதி மதம் முதலிய வித்தியாசமின்றியும் மற்றும் மூடப் பழக்க வழக்கங்களின்றியும் இயற்கை முறையில் வாழ்ந்து வந்தனர். அவர்களை மூடர்கள் என்று சொல்லவில்லை. ஆரியர் என்போர் இந்நாட்டிற்கு வந்தார்கள். அவர்கள் சுதேசத்தை விட்டுப் பிறர் நாடு வந்தது முட்டாள்தனம் என்கிறோம். ஆரியருக்கும் தமிழர்களுக்கும் போர் நடந்தது. வடஇந்தியாவை ஆரியர் வென்று தமிழர்களை தெற்கில் வெருட்டினார்கள். அந்நியராகிய சிறுதொகையினரை சுதேசத் தமிழர் பெரும்பான்மையராக இருந்தும் எதிர்க்க வேண்டிய முறைப்படி எதிர்க்கவில்லை. இவ்விஷயத்தில் அவர்கள் மூடர்கள். சுதேச நாட்டினர் வெளியிற்போ என்றபோது அந்நியனாகிய ஆரியன் போகாமல் சண்டையிட்டான். இது அயோக்கியத்தனமே. |