16 சுயமரியாதை எங்கள் அப்பன் வீட்டுச் சொத்தல்ல!
யுகங்கள் கழிந்தன. ஆண்டுகள் கழிந்தன! மாதங்கள் கழிந்தன. உலகம் துவங்கி எத்தனை ஆண்டுகளிருக்கும்? அத்தனை ஆண்டுகளும் நடைமுறையில் இல்லை; கழிந்து போயின. இறந்த காலங்கள் நிகழ்காலங்களாகத் திரும்பி வரப் போவதில்லை. நிகழ்காலமும் நிற்கப் போவதில்லை. எதிர்காலமும் நிகழ்காலமாகவும் பிறகு இறந்தகாலமாகவும் ஆகக்கூடும். நிச்சயம்! பஞ்சாங்கம் அல்லது காலண்டர் என்பவை காலத்தைக் குறிக்க ஏற்பட்டவை. அவை இறந்த காலத்தைக் குறித்துக் காட்டிவிட்டுப் பழைமையடைந்துபோய் ஒருவர் வீட்டுப் பெட்டியில் இருக்கக் கூடும். சென்ற ஆண்டுகளின் காலண்டர்கள் இந்த ஆண்டில் இருப்பது சகஜம். ஆனால் காலம் மாறக் கூடியது என்றால், இல்லை, இல்லை! இதோ பார்! இறந்த காலப் பழம் பஞ்சாங்கம்; ஆகையால் காலம் மாறவில்லையென்று யாராவது சொல்லுவார்களா? காட்டிய பழம் பஞ்சாங்கத்தையும் காணடிக்கும் எதிர்காலமும் வரும். கால சக்கரம் சுழலும்; நில்லாது; இது இயற்கை முறை. இனி, காலத்தோடியைந்த எண்ணங்கள் வாழ்க்கை முறைகள் மாத்திரம் மாறாமல் இருக்குமோ? மாறும். இதுவும் இயற்கை முறை. இவை இரண்டையும் கூட்டிக் காலமும் காலத்தின் அடையாளங்களும் மாறுகின்றன. மாறும். இது இயற்கைமுறை என்று மொத்தமாய்ச் சொல்லாம். |