சுயமரியாதைத் திட்டங்களையும் அவைகட்கு ஒத்த ஆஸ்திகம் என்பதில் உள்ள திட்டங்களையும் எடுத்து ஒவ்வொன்றையும் பற்றி இம்முறையில் சிந்திப்பவர் நமது முடிவுக்கு வரக்கூடும் என்பதோடு இதற்கு அனுசரணையாக ஒரே ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இதை முடிப்போம். காலம் ஓடுகிறது. நிற்காது. அது சுயமரியாதை வாழ்க்கையை நோக்கி ஓடுகிறது. இதுதான் இயற்கை முறை என்கிறோம். ‘தேசியம்’ என்பதென்ன? தேச சம்பந்தமான எண்ணங்கள் செயல்கள் முதலியவை. இவைகள் இந்நாட்டில் சுயமரியாதைக் கொள்கையாகிக் கொண்டு வருவதையுமா நாம் அறியாமல் இருக்கிறோம்” இறந்தகால ஆஸ்திகத் திட்டங்கள் என்ன கட்டுமானத்தோடு இருந்தன! இப்போது அவை நிலை தவறிப் போவானேன்? ப்ரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திர தர்மம் இரும்புக் குண்டுகள்போல் உட்கார்ந்திருக்கின்றனவோ? அந்நிய நாட்டுக்குக் கருவாடு ஏற்றுமதி செய்கிறாயா என்று கேட்டால் ‘நான்’ என்று சைவர் ஓடும் ஓட்டம், சென்னை ரிக்ஷாச் சகோதரர்கள் ஓடுவார்களா? ஒரு வீட்டுக்காரன், ஒரு தெருவார், பல கிராமத்தார், பல நகரத்தார், ஒரு மாகாணத்தார் என்ற வளர்ச்சி முறையைச் சுயமரியாதைக் கட்சியடைந்தது கொண்டும், தமது மனோவாக்குக் காயங்கட்குப் பல்லைக் கடித்துக் கொண்டு மறைப்புப் போட்டிருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டுச் ‘சுயமரியாதை’ இயற்கைமுறையில் (சுயமரியாதை எண்ணம், சுயமரியாதை வார்த்தை, சுயமரியாதைச் செய்கையாக) வெளிப்பட்டுக் கொண்டும் வருவது தெரியவில்லையா? தென்னாட்டுச் சுயமரியாதையைத் தந்தி கொடுத்துத் தெரிவித்த பின்பா வடநாட்டான் நெஞ்சில் சுயமரியாதை உணர்ச்சி எழுந்தது? |