21 கடவுள் உண்டா?
சுமார் 30 வருடத்திற்கு முன்பு புதுவையில் ஒரு வதந்தி கிளம்பிற்று. “நாய் மனிதன்போல் பாடுகிறது” என்று பல பக்கங்களிலும் பேசிக் கொண்டார்கள். என் காதிலும் விழுந்தது. மிகுந்த ஆச்சரியம். அதைப் பற்றியே அனைவரையும் விசாரித்தேன். என்னிடம் புதிதாகக் கேள்விப்பட்ட அந்த மனிதர்களும் அதுபற்றி அதிகம் தெரிந்ததுபோல் எடுத்துக் காட்டிப் புளுகியதுண்டு. பிறகு சில மனிதர், “நாய் பாடவில்லை; ஒரு பெட்டி பாடுகிறது” என்று சொன்னார்கள். நாய் பாடும் என்பதை நீ நம்பாதே என்றும் கூறினார்கள். அப்படியானால் பெட்டி மாத்திரம் எப்படிப் பாட முடியும் என்று எனக்குள் ஒரு கேள்வி பிறந்தது. பதில்தான் தெரியவில்லை. நாய் பாடட்டும் அல்லது பெட்டி பாடட்டும். பாட்டுகளை நான் கேட்பது எப்போது? அதன் உண்மையறிவது எப்போது? பாட்டு எங்கிருந்து துவக்கப்படும்? குரலினிமை எத்தகையது? பெட்டி பாடுவதானால் பெட்டிக்குள் மனிதன் இருக்கக் கூடுமா? நாய் பாடுவது மெய்யானால், பாட்டானது நாய் குலைப்பதுபோல் இருக்குமா? அசல் பாட்டாகவே இருக்குமா? எங்குச் சென்றால் இதன் உண்மை தெரியும்? நூதனமான விஷயங்களுக்கெல்லாம் பேர்போனது. சென்னைப் பட்டணம் போய் பெட்டிபாடுவதை நேரில் கேட்டு வரலாமா? அப்படிச் செய்தால் திரும்பி வீடு வந்து பணம் திருடியதற்குத் தண்டனையனுபவிக்க வேண்டுமே, என்று பலவாறு சிந்தித்தேன். |