பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 102

ஆண்டுகள் என்ன, பத்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கும் பாக்கியம் நம் மாணவர்களுக்குக் கிடைக்காது!

“ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
எங்கள்
அடிமைச் சாசனத்தைப்
புதுப்பித்துக் கொள்ள
நாங்கள்
வரிசையாய் நிற்பது
வாக்குச் சாவடியில் தான்”

என்று எல்.கே. போஸ் என்னும் இளைஞர் ‘கனல் கக்கக்’ கவிதை எழுதியிருக்கிறார்.

எனக்கென்னவோ, இவர் இவ்வளவு கோபப்படுவது நியாயமாகத் தெரியவில்லை.

தேர்தல் திருவிழாவில் வாக்காளர்தான் தெய்வம்... தெய்வம் தெளிவாய் இருந்தால் ஜனநாயகம் இவ்வளவு மலிவாய்ப் போயிருக்காதே!

ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கும்போது இந்தத் தெய்வம் எவ்வளவு கவனம் செலுத்துகிறது... எந்த மாநிலம் வருமான வரியைக் கழிக்காமல் கொடுக்கும், கூட்டிப் பார்த்தால் எந்த எண் ராசியாய் இருக்கும், எந்தச் சீட்டுக்குச் சீக்கிரம் குலுக்கல் நடக்கும் என்று சிந்தித்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறது.

‘கனவின் விலை ஒரு ரூபாய்’ என்று மாவேந்தன் ஒரு கவிதையில் சொன்னது மாதிரி ஒரு லாட்டரிச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு எவ்வளவு கனவு காண்கிறது, இந்தத் தெய்வம். கட்டடக் கனவு, கல்யாணக்கனவு, பயணக்கனவு, பதவிக் கனவு- இப்படி ஒரு ரூபாய்க்கு ஓராயிரம் கனவு காணத் தெருந்த இந்தத் தெய்வத்துக்கு ஏன் ஓர் ‘இந்தியக் கனவு’ காண மட்டும் தெரியவில்லையாம்?