ஒரு நாள் எம்.ஏ. படிக்கும் என் இளவல் வேடிக்கையாய்ச் சொன்னான்; “சிலப்பதிகார வகுப்புக்கு கட் அடித்துவிட்டு நண்பனுடன் மாதவி நடித்த ‘ராஜபார்வை’ பகல் காட்சிக்குப் போனேன். படம் விட்டுத் திரும்பும் போது சிலப்பதிகாரம் கற்பிக்கும் பேராசிரியப் பெருமகன் வாசலில் நிற்கிறார்-முதற்காட்சி பார்க்க...” ‘மாணவர் ஆசிரியர் ஒற்றுமை ஓங்குக’ என்று நான் மெல்லச் சிரித்தேன். சர்வவல்லமை ஆண்டவனுக்கு இருக்கிறதோ இல்லையோ, அன்றன்று புற்றீசல் போல் வெளிவரும் நம் சினிமாவுக்கு இருக்கவே செய்கிறது. மறந்து போயிருந்த மகாத்மாவுக்குக் கூட ஒரு புது மரியாதை ஏற்பட்டிருக்கிறதே... காரணம் சினிமா தானே! இந்த மகாத்மாவுக்கு ராட்டையைச் சுற்றத் தெரிந்ததே தவிர சினிமாவுக்குள்ள சீர்த்தியும் கீர்த்தியும் தெரிய வில்லையே.... ஒழுங்காய் அன்றைக்கே ஒரு ஊமைப்படத்தில் நடித்திருந்தாலும் போதுமே.... கிங் பெங்க்ஸ்லியின் இடத்தைக் கெட்டியாகப் பிடித்திருக்கலாமே! இந்திரா காந்திக்குப் பிறகு பிரதமர் ராஜீவ் என்று சில பத்திரிகைகள் எழுதினால் சம்பந்தப்பட்டவர்கள் அது வெறும் ஹேஸ்யம் என்று பதில் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் அது வெறும் ‘ஹாஸ்யம்’ என்பேன்.... இந்திரா காந்திக்குப் பிறகு பிரதமர் அமிதாப் என்றால் அது ஹேஸ்யம் என்று ஒப்புக் கொள்ளலாம்... இனிமேல் ஒரு நடிகரைத் தவிர வேறுயாரும் பிரதமர் ஆகமுடியும் என்று நினைத்துப் பார்ப்பதே ஒரு ஹாஸ்யம் |